சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவமதிப்பு குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்: 13 பஸ்கள் உடைப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று பா.ஜனதா அறிவித்த  முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதில் 13 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பை கண்டித்து, குமரியில் மாவட்ட பா.ஜனதா சார்பில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. மொத்தம் 13 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டன. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பஸ்களும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.நேற்று காலை வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.  9 மணிக்கு டவுன் பஸ்கள் இயக்கம் தொடங்கியது. 4, 5 பஸ்கள் சேர்த்து போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளை வரை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் கேரள அரசு பஸ்கள் பாறசாலைக்கும், களியக்காவிளைக்கும் இடையே உள்ள இஞ்சிவிளை வரை இயக்கப்பட்டது. காலையில் பஸ்கள் சரிவர இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மினிபஸ்கள் இயங்காததால் கிராம மக்கள் அவதி அடைந்தனர். 50 சதவீத ஆட்டோக்கள், கார்கள், வாடகை வேன்கள் இயங்கின. நாகர்கோவிலில் கோட்டார், மீனாட்சிபுரம், அண்ணாபஸ் நிலையம், மணிமேடை, வேப்பமூடுஜங்ஷன், செட்டிகுளம் ஜங்ஷன், செம்மாங்குடி சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வடசேரி,  ராமன்புதூர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

நாகர்கோவில் நகர பகுதியில் மருந்துகடைகள், டீக்கடைகள் திறந்து இருந்தன.  வடசேரி கனமூலம் சந்தை, அப்டா மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதுபோல் மார்த்தாண்டம், திருவட்டார், குலசேகரம், கருங்கல், திங்கள்நகர், குளச்சல், தக்கலை பகுதிகளிலும் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அடைத்து இருந்தன.  குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டு இருந்தன. கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு: பாஜ முழுஅடைப்பு போராட்டத்தால் குமரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று(நேற்று) நடைபெற இருந்த மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளதாக  துணைவேந்தர் பாஸ்கரன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: