‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளுக்கு ராட்சத கிரேன்கள், மரம் வெட்டும் இயந்திரங்கள் அனுப்பி வைப்பு: தூத்துக்குடி துறைமுகம் ஏற்பாடு

தூத்துக்குடி: ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், ராட்சத கிரேன்கள் மற்றும் மரம் வெட்டும் மிஷின்களை வழங்கியது. இதையடுத்து இவற்றை கலெக்டர் சந்தீப் நந்தூரி அனுப்பி வைத்தார்.தூத்துக்குடியில் இருந்து ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் வ.உ.சி. துறைமுக கழகம் 5 கிரேன்கள் மற்றும் 10 மரம் வெட்டும் இயந்திரங்கள் வழங்க முடிவு செய்தது. இதன்படி தேவையான பணியாளர்களுடன் கிரேன்கள் மற்றும் பவர் ஷா ஆகியவற்றை கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.அப்போது அவர் கூறுகையில், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, முதல்வர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ‘கஜா’ புயலினால் 10 மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளித்திடும் வகையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு வருகின்றன.

வ.உ.சி. துறைமுகம் சார்பில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 5 கிரேன்கள் மற்றும் 10 மரம் வெட்டும் இயந்திரங்கள் (பவர் ஷா) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு நிறுவனங்கள் மூலம் கிரேன்கள், மரம் வெட்டும் இயந்திரங்கள் பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மருந்துகள், பிஸ்கெட்டு பாக்கெட்டுகள், சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவிட பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்’’ என்றார்.

வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி கூறுகையில், ‘‘சுமார் 30 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் ரூ.3.20 கோடி மதிப்பிலான 12 வகையான அத்தியாவசிய பொருட்களை இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.நிகழ்ச்சியில், வ.உ.சி. துறைமுக சபை செயலாளர் ஜிசுராய், போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், தலைமை எந்திர பொறியாளர் சுரேஷ்பாபு, தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: