சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை: புதுச்சேரியிலும் வாய்ப்பு

சென்னை: வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த  வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெறுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ‘’கஜா’’ புயல் கடந்த 15ம் தேதி இரவு நாகையில் கரையை கடந்தது. அப்போது உருவான சூறாவளி காற்று, கனமழையால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்ைட, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சின்னா பின்னமானது. இந்த கோரத்தாண்டவத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

பல்லாயிரக்கணக்கான மின் கம்பம், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான கால் நடைகளும் பலியாகின. இந்த பாதிப்பு அடங்குவதற்குள் அடுத்த அடியாக டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னையைப் பொறுத்தவரை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணிக்கு மேல் சென்னை முழுவதும் கடும் இருள் சூழ்ந்தது.

அதன் பிறகு எழும்பூர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சாந்தோம், சேப்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், தாம்பரம், சோழிங்கநல்லூர், தரமணி, பெருங்குடி, கொளத்தூர், வில்லிவாக்கம், மடிப்பாக்கம், ஈக்காட்டு தாங்கல் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று(நேற்று முன்தினம்) நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளில்  நிலைகொண்டிருக்கும். அதைத்தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். புயலாக மாற வாய்ப்பில்லை. தாழ்வு மண்டலமாகவே தமிழக பகுதிகளை கடந்து செல்லும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். குறிப்பாக தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன்  காணப்படும்.  மொத்தத்தில் இரண்டு மாநிலத்திலும் 19 மாவட்டங்களில் இடைவெளி விட்டு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். மீனவர்கள் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் 21ம் தேதி (இன்று) வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக செங்கோட்டையில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்தப்படியாக மணிமுத்தாறு 6 செ.மீ., பாம்பன், பாபநாசம், திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது.  இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: