தேசிய பேரிடராக அறிவிக்க கோரி வழக்கு புயல் பாதிப்புகளை சீர்செய்ய போர்க்கால நடவடிக்கை

* பால், குடிநீர், மின் இணைப்பு வழங்க ேவண்டும்

* மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரிய வழக்கில், குடிநீர், பால் வழங்கவும், மின் இணைப்பை சரி செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ள ஐகோர்ட் கிளை மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம், சேதுபதி நகரைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கஜா புயலால் இதுவரை சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 82 ஆயிரம் பேர் நேரடியாக பாதித்துள்ளனர். சுமார் 2 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 735க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. 1.17 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 88,102 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களும் பாதித்துள்ளன. மீனவ கிராமங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றாக முடங்கிப் போயுள்ளது. சாலைகளும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து சேவை இல்லாமல் போனது. அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, சோளம், வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களும்  முற்றிலும் நாசமாகியுள்ளன. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள சுமார் 3 ஆயிரம் வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இங்குள்ளவர்களுக்கு இதுவரை எந்தவிதமான அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. ஆனால், தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பாதிக்கப்பட்ட போதும் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை.

மத்திய அரசின் தேசிய புயல் பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ் புயலால் பாதிக்கப்பட்டோருக்கான பல்நோக்கு நிவாரண மையங்கள் நாட்டின் பல மாநிலங்களில் உள்ளன. ஆந்திராவில் 218, ஒடிசாவில் 312, குஜராத்தில் 22, மேற்கு வங்கத்தில் 15 என இந்த மையங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்ைல. எனவே, நீதிமன்றம் தலையிட்டு கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். புயலால் உயிரிழந்தவர்களுக்கும், ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பை வழங்கி இயல்பான நிலையை உருவாக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டோருக்கான பல்நோக்கு நிவாரண மையங்களை உடனடியாக தமிழக கடலோர மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டும். புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்புப் பணியை மேற்ெகாள்ளவும் முப்படையினருடன், துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அவசர மனுவாக நேற்று விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘குடிநீர், பால், மெழுகுவர்த்தி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கூட இதுவரை கிடைக்கவில்லை. மின் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாதிப்புக்கு பின்னரும் இன்றுவரையில் மத்திய அரசின் தரப்பில் எந்த நிவாரண பணிகளும் நடக்கவில்லை. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கூட வரவில்லை. இந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியது அவசியம்,’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக மாநில அரசின் தரப்பில் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளவற்றின் மீதான மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும். தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர், பால், நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கிடும் பணியை தமிழக அரசு தரப்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மின் இணைப்பை உடனடியாக வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். கஜா புயல் பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளை தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திண்டுக்கல், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்ட கலெக்டர்கள் 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (22ம் தேதிக்கு) தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: