கால்வாய்கள் தூர்வாராததாலும், பாதாளச் சாக்கடை வசதி இல்லாததாலும் தாம்பரம், ஆலந்தூரில் கழிவுநீர் தேக்கம்

ஆலந்தூர்: கால்வாய்கள் தூர்வாராததாலும், பாதாளச் சாக்கடை வசதி இல்லாததாலும் தாம்பரம் மற்றும் ஆலந்தூரில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால், மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தை ஒட்டி ஆலந்தூர் 12வது மண்டல மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி மற்றும் உடைந்த பாலம், சிறுபாலம் போன்றவற்றை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதன்படி, பல இடங்களில் இந்த பணிகள் சரிவர நடந்தபோதிலும் சில இடங்களில் இந்தப்பணி அரைகுறையாக நடந்துள்ளது. சில பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தாமதமாக தொடங்கப்பட்ட இந்த பணிகளை குறித்த நாட்களுக்குள் முடிக்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக, ஆலந்தூர் ஜி.எஸ்.டி.சாலை, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், தில்லைகங்கா நகர் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து முடிந்தாலும் அந்தபகுதிகளில் எடுக்கப்பட்ட கழிவுகளை கால்வாய் அருகிலேயே விட்டு சென்றுள்ளனர். இதனால், மழை பெய்ததால் அந்த கழிவுகள் சகதியாக மாறி மீண்டும் கால்வாயிலேயே விழுந்து விடுவதால், அந்த பகுதிகளில் தூர்வாரி எந்தவித பிரயோஜனமும் இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல் நங்கநல்லூர், பழவந்தாங்கல், தில்லை கங்காநகர் போன்ற பகுதிகளில் உள்ள புதிதாக சிறுபாலங்கள் கட்டும் பணி நடந்தது. இந்தப்பணிகள் முடிந்த பின்பும் அங்குள்ள கழிவுகள் அங்கேயே கிடப்பதால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லமுடியாமல் பல தெருக்களை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆதம்பாக்கத்தில் வீராங்கல் ஓடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக தோண்டப்பட்ட சாலை பள்ளங்கள் அப்படியே உள்ளதால் வாகன விபத்து ஏற்படுவதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
Advertising
Advertising

ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி இங்கொன்றும் அங்கொன்றுமாக திட்டு திட்டாக பணி நடந்தது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் மழைநீர் செல்லாததால் சாக்கடை நீர் துர்நாற்றத்துடன் சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.இந்தசாலையில் வாகன ஓட்டிகளும் நடந்து செல்வோரும் இந்த வழியாக செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டனர். ஆலந்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடந்து வருவதாக பொதுமக்களும் நலச்சங்க நிர்வாகிகளும் குற்றம் சாட்டி உள்ளனர்.தாம்பரம்: தாம்பரம் சண்முகம் சாலையில் தாம்பரம் மார்க்கெட் உள்ளது. மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், முடிச்சூர், கன்னடபாளையம், இரும்புலியூர்உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், துணிக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி செல்ல தினமும் வந்து செல்வது வழக்கம்.

இவ்வாறு பொதுமக்கள் தினமும் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் உள்ள புது மார்க்கெட் முதலாவது லேன் தெருவில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல உரிய வழி இல்லாமலும், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கின்றது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நடந்து செல்ல முடியாமலும், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய், மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுபோல கழிவுநீர் தெரு முழுவதும் தேங்கி நிற்பதால் அங்குள்ள வியாபாரிகளின் வியாபாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அங்கிருந்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என தாம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: