கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாகயர் மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் மிளகாய் பொடி வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அந்த பதவியை விட்டு நீக்கிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். இதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே கட்சி, மற்றும் எதிர்க்கட்சியினர் சேர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பது உறுதியானதால், அவரது ஆட்சி நீடிக்காது என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். இந்த நிலையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, சபாநாயகரையும், எதிர்க்கட்சியினரையும் சந்தித்து மீண்டும் ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடத்தும்படி அறிவுரைத்தார்.