கஜா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு தலைவர்கள் பாராட்டு

சென்னை: கஜா புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கு திமுத தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமலஹாசன், இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.

அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தமிழக அரசு, அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது என்றார்.

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சேதங்களும், பாதிப்புகளும் பெரிதும் குறைந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சேதங்களும், பாதிப்புகளும் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் துரிதமாக செயல்பட்ட தமிழக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், புயல் எச்சரிக்கை வந்த காலத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சருக்கும், களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உயிரை துச்சமென மதித்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்த பேரிடர் மேலாண்மை குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் பாரட்டுக்குரியவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்நிலையில் கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது வரவேற்கத்தக்கது. குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும் சிறந்த பணியை மேற்கொள்ளும்போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: