கஜா புயல் காற்று காரணமாக, திருச்சியில் விமான சேவைகள் முற்றிலும் பாதிப்பு

திருச்சி :  கஜா புயல் காற்று காரணமாக, திருச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் கஜா புயல் காரணமாக அதிகாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததோடு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்த விழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது.பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் பலத்த காற்று காரணமாக தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 3 முறை வானில் வலம் வந்தும் தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து பயணிகளுடன் அந்த விமானம் சென்னைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. வானிலை சீரடைந்த பின்பு விமானம் மீண்டும் திருச்சி புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏஷியா விமானம் கொச்சியில் தரையிறக்கப்பட்டது.  

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானம், தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.கொச்சினில் இருந்து திருச்சிக்கு வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.சென்னையிலிருந்து திருச்சிக்கு வர வேண்டிய இண்டிகோ நிறுவனத்தின் இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி-சென்னை, சென்னை-திருச்சி விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.அதேபோல், கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வர வேண்டிய விமானம் தாமதப்படுத்தப்பட்டது.. மேலும், அங்கு விமான சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: