விளைச்சல் அதிகரிப்பால் வெற்றிலை விலை குறைவு : மோகனூர் விவசாயிகள் கவலை

நாமக்கல்: வெற்றிலை விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக, மோகனூர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர், மணப்பள்ளி, பாலப்பட்டி ஆகிய ஊர்களில் வெற்றிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் வெள்ளைக்கொடி ரக வெற்றிலையை பயிரிடுகின்றனர். வாய்க்கால் பாசனம் மூலம் வெற்றிலை கொடிக்கால் பராமரிக்கப்படுகிறது. வாய்க்காலில் ஆண்டுக்கு 3 மாதம் மட்டுமே தண்ணீர் வருவதால், மற்ற காலங்களில் காவிரி ஆற்றை நம்பியே விவசாயிகள் இருக்க வேண்டியுள்ளது. மோகனூர் பகுதியில் பயிரிடப்படும் வெற்றிலைகள், பரமத்திவேலூர் வெற்றிலை மார்க்கெட் மூலம் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம், லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வெற்றிலை கொடிக்கால் பயிரிட்டுள்ளனர். இதனால் விளைச்சல் அதிகரித்து விலை சரிந்துள்ளது. இது குறித்து மோகனூரை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி கூறுகையில், ‘ஒரு கூடை வெற்றிலையை பறித்து மார்க்கெட்டில் விற்பனை செய்தால் ஆட்கள் கூலி, போக்குவரத்து செலவு போக 200 மட்டுமே கிடைக்கிறது. தற்போது வெற்றிலை கொடிக்கால் பராமரிப்பு செலவும் அதிகரித்து விட்டது. ஆற்றில் தண்ணீர் வராத காலங்களில், காசு கொடுத்து தான் தண்ணீர் வாங்கவேண்டியுள்ளது. இதனால், வெற்றிலை விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. விளைச்சல் அதிகரிப்பால், வியாபாரிகள் குறைந்த விலைக்கு வெற்றிலையை கேட்கும் நிலை வந்துள்ளது,’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: