குறுவை சாகுபடி கைகொடுத்தால் அரிசி விலை மேலும் குறைய வாய்ப்பு: ஆலை உரிமையாளர்கள் தகவல்

காரைக்குடி: குறுவை சாகுபடி கைகொடுத்தால் அடுத்தடுத்த மாதங்களில் அரிசி விலை மேலும் குறையும் என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல், பள்ளத்தூர் ஆகியவை தமிழகத்தின் அரிசி உற்பத்தியில் முக்கிய ஊர்களாக திகழ்கின்றன. இங்கு 200க்கும் மேற்பட்ட  நவீன அரிசி ஆலைகள் உள்ளன. தமிழகத்தின் கோவை, பொள்ளாச்சி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர், உதகமண்டலம் போன்ற மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற  வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்துதான் அரிசி செல்கிறது.

தமிழகத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், புதுவயல், பள்ளத்தூர் ஆலைகளுக்கு நெல்லின் வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து அதிக வரத்து உள்ளது. இதனால் விலை அதிகரிக்காமல் பழைய நிலையே தொடர்கிறது.

இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு இதே  மாதத்தில் டீலக்ஸ் பொன்னி கிலோ 42க்கு (புதிய ரகம்) விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ 40க்கு (உள்ளூர் மில் விலை) விற்பனை ஆகிறது.  100 கிலோ கொண்ட மூட்டை 3,900 முதல் 4,100 வரை  விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து அதிகம் இருக்கும் என்பதால், விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு காவிரியில் நீர் சரியான நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் குறுவை சாகுபடி நல்ல விளைச்சல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நெல் வரத்து அதிகமானால் அரிசி விலை ேமலும் குறையும். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் நல்ல வரத்து உள்ளது. இதனால் அரிசி விலை சொல்லும்படி உயரவில்லை,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: