தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடக்கம் ரூ.9,000 கோடி நிதியை திரும்ப பெற முடிவு: மெத்தனம் காட்டும் மாநில அரசு

வேலூர்: தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடங்கப்படாத நிலையில், 9 மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.9 ஆயிரம் கோடி நிதியை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் முதல்கட்டமாக 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. 2ம் கட்ட தேர்வில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், திருப்பூர், சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்கள் இடம் பிடித்தன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் மின்சிக்கனம், பல்வேறு சேவை மையங்கள், வர்த்தக மற்றும் பொருளாதார கட்டமைப்புகள், சாலை போக்குவரத்து, முதலீடுகளை ஈர்ப்பது போன்ற திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கென ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

முதற்கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ரூ.300 கோடி நிதி ஸ்மார்ட் சிட்டி வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் அறிவித்தபடி முதற்கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. மாநில அரசின் இத்தகைய மெத்தனத்தால் அதிருப்தியடைந்த மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த ரூ.9 ஆயிரம் கோடி நிதியை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 6.3 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. சென்னை, திருச்சி, சேலம் தவிர்த்து மற்ற 9 மாநகராட்சிகளில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியோடு திட்டம் தடுமாறி நிற்கிறது. வேலூர் உட்பட 9 மாநகராட்சிகளில் அரசியல் குறுக்கீடுகளால் ஸ்மார்ட் சிட்டி பணிகளை கண்காணிக்கும் செயல் அலுவலர், முதன்மை நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

அதேபோல் பொறியியல் பிரிவில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் பணியடங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.  வேலூரில் நேதாஜி மார்க்கெட், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோட்டையை அழகுபடுத்துதல், அடுக்குமாடி கார் பார்க்கிங் உட்பட 9 பணிகளுக்கான திட்ட அறிக்கைகள் நகராட்சிகள் நிர்வாக இயக்குனரகத்தில் கையெழுத்தாகி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனிடையே ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்காவிட்டால் 9 மாநகராட்சிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.9 ஆயிரம் கோடி நிதியை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை திரும்பப் பெறும் முடிவில் இருப்பதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்தனர்.

3 ஆண்டுகளாக உறங்கும் ரூ.300 கோடி

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக கடந்த 2014ம் ஆண்டு ரூ.1,145 கோடி நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில் நகரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 34 பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரூ.300 கோடியில் 9 பணிகளுக்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனரக ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது. எனவே, இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியுமா? என்கிற குழப்பமான நிலை உருவாகியிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: