ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக இரண்டாவது நாளிலேயே மண்ணைக் கவ்வியது அரியானா

ரோட்டக்: ஜார்க்கண்ட் அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், அரியானா அணி 2வது நாள் ஆட்டத்திலேயே தோல்வியைத் தழுவியது.

பன்சிலால் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த அரியானா அணி முதல் இன்னிங்சில் 81 ரன்னுக்கு சுருண்டது. ஷுபம் ரோகில்லா 36, ஹிமான்ஷு ராணா 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). ஜார்க்கண்ட் பந்துவீச்சில் அஜய் யாதவ் 4, ராகுல் சுக்லா 3, வருண் ஆரோன் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 143 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அனுகுல் ராய் 27, கேப்டன் இஷான் கிஷண் 25, நஜிம் சித்திக்கி 21, ஜக்கி 17, சவுரவ் திவாரி 16 ரன் எடுத்தனர். அரியானா பந்துவீச்சில் ஹூடா 5, பூனிஷ் மேத்தா 3, மோகித் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். 62 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அரியானா அணி மீண்டும் மோசமாக பேட் செய்து வெறும் 72 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

மேத்தா 15, சாய்னி 14, சாண்டிலா, கேப்டன் மோகித்* தலா 11 ரன் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர் (3 பேர் டக் அவுட்). ஜார்க்கண்ட் பந்துவீச்சில் வருண் ஆரோன் 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 32 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அஜய் 3, சுக்லா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 11 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜார்க்கண்ட் 4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 12 ரன் எடுத்து வென்றது. கேப்டன் இஷான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சித்திக்கி 10, சுமித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜார்க்கண்ட் அணி 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. இப்போட்டி 2ம் நாளிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் ரன் குவிப்பு: திருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் தமிழக அணியுடன் நடைபெறும் ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 523 ரன் குவித்துள்ளது. பவனகா சந்தீப் 130 ரன் (221 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்), சாய்ராம் 42 ரன் எடுத்தனர். இரட்டை சதம் விளாசிய கேப்டன் அக்‌ஷத் ரெட்டி 248 ரன் (477 பந்து, 22 பவுண்டரி, 3 சிக்சர்), மிலிந்த் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

பெங்கால் 510/9 டிக்ளேர்: கொல்கத்தா ஈடன் கார்டனில் மத்தியப்பிரதேச அணியுடன் நடைபெறும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 510 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஈஸ்வரன் 86, கோஷ் 100, கேப்டன் மனோஜ் திவாரி 201* ரன் (279 பந்து, 20 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். ம.பி. பந்துவீச்சில் ஷுபம் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய மத்தியப்பிரதேசம் 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன் எடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: