திருநாவுக்கரசரை மாற்ற வலியுறுத்தி இளங்கோவன் ஆதரவாளர்கள் இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கோஷ்டி பூசல் முற்றி உள்ள நிலையில், திருநாவுக்கரசர் மீது புகார் செய்ய ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் இன்று டெல்லி செல்கின்றனர். தமிழக காங்கிரசுக்கு ‘வேகமாக  செயல்படக்கூடிய’ தலைவர் கேட்டு மேலிடத்தில் புகார் செய்ய உள்ளனர்.  கோஷ்டி பூசல் இல்லாத காங்கிரசா என்று மற்ற கட்சியினர் கிண்டல் செய்யும் அளவுக்கு சத்தியமூர்த்தி பவனில் வேஷ்டி கிழிந்த வரலாறு தமிழக காங்கிரசுக்கு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக அடங்கி இருந்த கோஷ்டி பூசல்  தற்போது மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ளது. திருநாவுக்கரசர் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து ஈவிகேஎஸ்.இளங்கோவனுடன் கருத்து மோதல் இருந்து வருகிறது.   இந்த சூழ்நிலையில், இளங்கோவன் ஆதரவாளர்களும், முன்னாள் மாவட்ட தலைவர்களுமான 7 பேர் கூட்டாக ஒரு அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதில், ‘‘எம்ஜிஆர் இறந்த போது திருநாவுக்கரசர் என்ன செய்து  கொண்டிருந்தார்? என்ற மர்மத்தை வெளிக் கொண்டு வருவோம்’’என்று கூறியிருந்தனர். இது காங்கிரசில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ‘‘முட்டாள்தனமாக அறிக்கைவிட்டுள்ளனர் என்றும், அவர்களை யார் என்றே தெரியாது. அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மீது மேலிடம் மூலம்  நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார். இப்படி தலைவர்களின் பேட்டி போர் காங்கிரசில் கோஷ்டி போராக மாறி வருகிறது.  இந்நிலையில், திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு ஸ்பீடான ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இளங்கோவன் ஆதரவாளர்கள் இன்று டெல்லி புறப்படுகின்றனர். திருநாவுக்கரசர் மீது அடுக்கடுக்கான  புகார்களை கொண்டு செல்கின்றனர். ராகுல்காந்தியிடம் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காதபட்சத்தில் முகுல் வாஸ்னிக், அகமது படேல், அசோக் கெலாட் ஆகியோர் புகார் செய்ய உள்ளனர்.

 இந்த பயணம் குறித்து அவர்கள் கூறுகையில்,‘‘ திருநாவுக்கரசர் எங்களை யாரென்றே தெரியாது என்கிறார். பிறகு எப்படி காங்கிரஸ்காரர்களை அவருக்கு தெரியும். காங்கிரசை பலப்படுத்துவதற்கு பதிலாக  பலவீனப்படுத்திவிட்டார். கட்சியில் வளர்ச்சி என்பதே இல்லை. எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்லக்கூடிய திறமை அவருக்கு இல்லை. மேடையிலும் உட்கட்சி பூசலை பற்றி தான் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள  ஸ்பீடான தலைவர் ஒருவரை நியமிக்க கோரி மேலிடத்தில் புகார் செய்யவே டெல்லி செல்கிறோம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: