மார்வெல் காமிக்ஸ் நிறுவன இயக்குனர் ஸ்டான் லீ காலமானார்

லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும், பதிப்பாளருமான ஸ்டான் லீ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 95 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஸ்பைடர்மேன், ஐயர்ன் மேன்,  தோர், ஹல்க் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை தமது கற்பனையால் வடிவமைத்து உலகப்புகழ் பெற்றவர் ஸ்டான் லீ.

அவர் இயற்றிய காமிக்ஸ் புத்தகங்கள் இளம் வாசகர்களை மெய்சிலிர்க்க வைப்பதுடன் அந்த கதாபாத்திரங்களை மையமாக கொண்டு திரைப்படங்களும் வெளியானது. அவை உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு பெற்று வசூலை வாரிக்குவித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அவென்ஜர்ஸ் இன்ஃபினிடி வார் (Avengers: infinity war) திரைப்படம் உலகம் முழுவதும் $2.05 பில்லியன் டாலர் வசூல் செய்து உலக சாதனை படைத்தது. உலகிலேயே சூப்பர் ஹீரோக்களை மையமாக வைத்து வெளியான படங்களில் இதுவே அதிகபட்ச வசூல் சாதனை ஆகும்.

மார்வெல் ஹீரோக்களின் அனைத்து படங்களிலும் ஸ்டான் லீ கவுரவ தோற்றத்தில் வந்துவிடுவார். அதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சிடார்-சினாய் மருத்துவ மையத்தில் இன்று காலை உடல்நலக்குறைவால் அவர் காலமானார். மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: