சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் டி20 டிக்கெட் விற்பனை செய்த 12 பேர் கைது

சென்னை: சேப்பாக்கம் மைதானம் அருகே டி20 போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட் கடந்த வாரமே விற்று தீர்ந்து விட்டது. இந்நிலையில், சிலர் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் மாலை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தின் அருகே சிலர் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கள்ளச்சந்தையில் டி20 டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்த பென்னேரியை சேர்ந்த சங்கர் (30), முடிச்சூர் பார்த்தசாரதி (25), பெருங்குடி ஏழுமலை (39), தண்டையார்பேட்டை முனிருதின் (32), பெரம்பூர் நரேஷ்குமார் (34), மயிலாப்பூர் ராஜாசுந்தரம் (28), திருவொற்றியூர் கவுசிக் (20), வேளச்சேரி தீபக் (22), நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (54), திருவள்ளூர் செல்வகுமார் (25), வியாசர்பாடி சர்மா நகர் கார்த்திக் (26), தீபக்சுந்தர் (24) ஆகிய 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டி20 போட்டிக்கான 22 டிக்கெட்டை போலீசார் பறிமுதல் ெசய்தனர். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக ஏற்கனவே கைது ெசய்யப்பட்ட பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் அளித்த தகவலின்படி, தலைமறைவாக உள்ள காவலர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகில் நேற்று முன்தினம் 2 அரிவாள்களுடன் உலா வந்த ரவுடிகள் கொருக்குப்பேட்டையை சேர்ந்த தினேஷ் (20), முத்தமிழன் (29) ஆகியோரை திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

* மனைவி பிரிந்து சென்ற விரக்தியடைந்த புழல் அடுத்த விநாயகபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (48), நேற்று காலை போதையில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* கோடம்பாக்கம் யூனிவர்செல் காலனியை ேசர்ந்தவர் தர்மதுரை (40). இவர் தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து அதே பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பணி காரணமாக அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். நேற்று காலை அவர் அலுவலகத்திற்கு வந்து போது பூட்டு உடைக்கப்பட்டு, அலுவலக அறையில் வைத்திருந்த விலை உயர்ந்த 3 கேமராக்கள், லென்சுகள், ரூ.65 ஆயிரம் பணம் மாயமாதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

* பெரம்பூர் அடுத்த ஏழுகிணறு கிரிகோரி தெருவை சேர்ந்த ஜாப்பர் (32) என்பவரின்  செல்போன் கடையில் வேலை செய்யும் ஏழுகிணறு பாளையப்பன் தெருவை சேர்ந்த ரஷிக்கான் (36) என்பவரை கடந்த 1ம் தேதி இரவு வழிமறித்து அவரை ரூ.60 லட்சம் கொள்ளையடித்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக்தாவூத் (26), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கிஷோர் (25), பொன்னேரியை சேர்ந்த சதீஷ் (26) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* சேலையூர் அருகே பைக்கில் சென்றபோது சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்ட

கன்னியாகுமரியை சேர்ந்த ஹெர்பர்ட் ராஜதுரையின் மகன் பிரைட் ஆர்.துரை (21) மழைநீர் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். உடன் சென்று அவரது நண்பர் கேரளாவை சேர்ந்த ஜோவி (21) காயமடைந்தார்.

* தாம்பரம் ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தாம்பரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (30), அலெக்ஸ் (33), அருண்குமார் (25), செல்வம் (35), மணி (25), பாபு (34), விஜயரங்கன் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

* துபாய் சென்ற கணவன் பேசுவதை தவிர்த்ததால் கிண்டி மடுவாங்கரை மசூதி காலனி 5வது தெருவை சேர்ந்த ஜெனதுல் பிரதோஸ் (29) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* கிணற்றின் சுவர் மீது அமர்ந்து மின் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுத்த போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்த மதுரவாயல், தனலட்சுமி நகர், 12வது தெருவை சேர்ந்த பிளம்பர் சரவணன் (34) பரிதாபமாக இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: