தருமபுரி அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த வழக்கு : விசாரணை அதிகாரி மாற்றம்

தருமபுரி: தருமபுரி அருகே பாலியல் வன்கொடுமையால் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கில், விசாரணை அதிகாரி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றி மாவட்ட எஸ்,பி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி, பழங்குடி சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2-ம் தேதி முதல் தீபாவளிப் பண்டிகை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்த அந்த மாணவி, கடந்த 6-ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்,சதீஷ்  என்ற இரு அரக்கர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டடுள்ளார். இந்த அசம்பாவிதத்தின் போது தன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தினால் ஆத்திரமடைந்த இருவரும் மாணவி சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், காவல் நிலையத்தில் அலட்சியமாகத் தட்டிக் கழிக்கவே, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் எண்ணான 1077-க்கு அழைத்து புகாரைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதன்பிறகே கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

தொடர் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு மாணவியை அழைத்துச் சென்றபோது உடல் அளவில் அவர் மிகவும் பலவீனமாக இருந்துள்ளார். மருத்துவப் பரிசோதனை முடியும் வரை பெண்கள் விடுதியில் தங்கி இருக்கட்டும் என்று அரசு தரப்பில் பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்படவே, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு முக்கிய குற்றவாளியான ரமேஷை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரின் அலட்சியத்தால் மாணவி உயிரிழந்ததாக கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது இவ்வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: