ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஐந்து தீர்த்தங்களுக்கு மட்டுமே பிரதிஷ்டை: மகாலட்சுமி தீர்த்தம் மாற்றப்படாது?

மண்டபம்: ராமேஸ்வரம் கோயிலில் 6 தீர்த்தங்களுக்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று 5 தீர்த்தங்களுக்கு மட்டுமே பிரதிஷ்டை நடந்தது. புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, பின்னர் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பிறகு சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை மற்றும் பக்தர்கள் அதிகம் வரும் நாட்களில் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் 1 முதல் 6 வரையிலான தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் பூட்டி விடுகிறது. இதனால் பக்தர்கள் முதல் 6 தீர்த்தங்களில் நீராட முடியாமல் வேதனையுடன் திரும்புகின்றனர்.  இதுகுறித்து விசாரணை செய்த ஐகோர்ட் மதுரை கிளை, முதல் 6 தீர்த்தங்களையும் பக்தர்கள் நீராடும் வகையில் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் ரூ.30 லட்சம் செலவில் மகாலட்சுமி, சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி, சங்குதீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய முதல் 6 தீர்த்தங்களை கோயிலின் 2ம் பிரகார வடக்கு பகுதியில் புதிதாக அமைத்தது. இதில் 5 தீர்த்தங்களில் புனிதநீர் வைக்கப்பட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. புனித நீரை கோயிலின் 3ம் பிரகாரம் வழியாக சுற்றி வந்து புதிதாக தோண்டப்பட்ட தீர்த்தங்களில் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதல் தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தத்தை மாற்ற வேண்டாம் என ராமேஸ்வரத்தை சேர்ந்த சில அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மகாலட்சுமி தீர்த்தத்திற்கு பிரதிஷ்டை செய்யவில்லை.  ஐகோர்ட் கிளை 6 தீர்த்தங்களுக்கும் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், 5 தீர்த்தங்களுக்கு மட்டுமே நேற்று பிரதிஷ்டை நடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: