உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும்: எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அழைப்பு

சென்னை: மாற்றுப் பாதையில் பயணிக்க சென்ற அதிமுகவினர், உயர் நீதிமன்றம் அளித்த  தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும்  என்று முதல்வர் எடப்பாடி, துணை   முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள மடல்:

தமிழகத்தில் ஜெயலலிதா அமைத்து தந்திருக்கும் நல்லாட்சி, மென்மேலும் வலுப்பெற்று மக்கள் பணிகளை சிறப்புடன் ஆற்றுவதற்கு உதவிடும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வெளிவந்தவுடன்  அதிமுக தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  அதிமுக புதியதோர் எழுச்சியை பெற்றிருக்கிறது என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து  மகிழ்கின்றனர்.ஜெயலலிதா தமிழக சட்டமன்ற பேரவையிலும், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களிலும் சூளுரைத்தவாறு, அதிமுக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழகத்தில் ஆட்சி செய்து, சமத்துவ, சமதர்ம சமுதாயம் உருவாகிட  பாடுபடும். ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கு தொண்டாற்ற நமக்கு கிடைத்த கருவிகள் தானே தவிர, பதவிக்காக செயல்படும் சிந்தனை நம்மில் யாருக்கும் கிடையாது. மக்கள் தொண்டுதான் நம் ஒரே குறிக்கோள். அந்த  குறிக்கோள் நிறைவேற உயர் நீதிமன்ற தீர்ப்பு நமக்கு மேலும் உதவுகிறது.

மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க நீதி தேவதை நமக்கு புதிய பாதையை வகுத்து தந்திருக்கிறது. `நீர் அடித்து நீர் விலகுவதில்லை’’ என்பது முதுபெரும் தமிழ்  பழமொழி அல்லவா? சிறு சிறு மனமாச்சரியங்களையும், எண்ண வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு நாம் ஒன்றுபட்டு உழைக்கும்போது, நமது பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் கொண்ட இயக்கமாக, ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து, நம் அரசியல் எதிரிகளை தேர்தல்  களத்தில் வீழ்த்தும் பெரும்படையாக உருவாகும்.ஜெயலலிதா வழியில் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் அதிமுகவில் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக, அன்பும், பாசமும் கொண்டு சகோதர உணர்வுடன் மக்கள் பணி ஆற்றி வருகிறோம். சில  தவறான வழிநடத்துதல்களின் விளைவாகவும், ஆங்காங்கே அதிமுக தொண்டர்களிடையே நிலவிய சிறு சிறு மனக் கசப்புகள் காரணமாகவும், மக்கள் பணியாற்ற வாய்ப்புகள் தேடியும் மாற்றுப் பாதையில் பயணிக்க சென்ற அதிமுகவினர், உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு, அதிமுக என்னும், எம்.ஜி.ஆர்.,  ஜெயலலிதா ஆகியோரின் மகத்தான மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று மிகுந்த பாசத்தோடும், அன்போடும் அழைக்கின்றோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: