மத்திய நேரடி வரிகள் ஆணையம் தகவல் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்தை தாண்டியது

புதுடெல்லி: ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 81 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது 68 சதவீத உயர்வாகும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது. இதுபோல் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வருமான வரி மற்றும் நேரடி வரிகள் வசூல் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை கொள்கை முடிவு எடுக்கும் முக்கிய அமைப்பான சிபிடிடி வெளியிட்டுள்ளது.  அதுபற்றிய விவரம் வருமாறு: நாட்டில் ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை சுமார் 68% அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், நிறுவனங்கள், இந்து பிரிக்கப்படாத கூட்டு குடும்பங்கள்) உள்பட ஆண்டிற்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்துள்ளது நல்ல முன்னேற்றம். கடந்த 2014-15 நிதியாண்டில் வரி செலுத்திய சுமார் 88,649 நிறுவனங்கள் தங்களது வருமானம் ஆண்டிற்கு ஒரு கோடிக்கும் மேல் என்று கணக்கு காட்டியுள்ளன. இந்த எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 1,40,139 பேராக அதிகரித்துள்ளது.

இது 60 சதவீதம் முன்னேற்றம் என்று சிபிடிடி தெரிவித்துள்ளது. இதேபோல், ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 48,416 என்ற நிலையில் இருந்து 81,344 ஆக அதிகரித்துள்ளது. இது 68 சதவீதம் வளர்ச்சியாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வரிகள் துறை எடுத்த பல சட்டங்கள், விழிப்புணர்வு, அமலாக்க நடவடிக்கள் உள்பட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் காரணமாக இந்த அளவிற்கு வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சிபிடிடி தலைவர் சுசில் சந்திரா தெரிவித்தார். இதேபோல், கடந்த மூன்று நிதியாண்டுகளில் வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது 80 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த 2013-14ல் 3,79 கோடியாக இருந்தது 2017-18ம் ஆண்டில் 6.85 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: