தஞ்சை பெரிய கோயிலில் 41 சிலைகளில் நவீன கருவி மூலம் சோதனை: சிலை கடத்தல் தடுப்பு போலீசார் நடவடிக்கை

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் நேற்று 2வது நாளாக ஐம்பொன் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மாயமான ராஜராஜசோழன் மற்றும் அவரது பட்டத்து இளவரசியான லோகமாதேவி சிலைகள், குஜராத் மியூசியத்தில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரிய கோயிலில் உள்ள பழமையான சிலைகள திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இதனால் கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஏற்கனவே 2 முறை ஆய்வு செய்திருந்தனர். 3-வது முறையாக நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். எக்ஸ்.ஆர்.எப். என்ற அதிநவீன கருவியை வைத்து சிலைகள் ஐம்பொன்தானா அல்லது வேறு எந்த உலோகத்தில் செய்யப்பட்டுள்ளது என்று கண்டறிந்தனர். ஆய்வுகள் முடிந்தவுடன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோலுக்கு சென்று, 19 சிலைகளை ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில், 4-வது தடவையாக பெரிய கோயிலில் நேற்றும் ஆய்வு மேற்கொண்டனர். காலை 7 மணிக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் 25 பேரும், இந்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் தொல்லியல் துறையினரும் வந்தனர். சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து சிலைகளை எடுத்து ஆய்வு செய்தனர். காலை 9 மணி வரை ஆய்வு நடந்தது. இதன்பின்னர், திருவாரூருக்கு புறப்பட்டு சென்றனர்.திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சென்று 9.30 மணியளவில் சோதனையை தொடங்கினர்.

கோயிலில், சிலை பாதுகாப்பு ைமயத்தில் 4,359 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 625 கோயில்களை சேர்ந்ததாகும். இந்த சிலைகளின் தன்மை, நீளம், அகலம் ஆகிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களைசிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அறநிலையத்துறை ஒப்படைத்தனர். பின்னர், அந்தந்த கோயில்களின் அறநிலையத்துறை அலுவலர்கள் சுமார் 100 பேரிடம் சிலைகளை காட்டி விசாரணை நடத்தினர்.

விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

பெரிய கோயில் ஆய்வு குறித்து, இந்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் கூறியதாவது: தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன் அதிநவீன கருவிகளை கொண்டு சிலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரிய கோயிலில் உள்ள 41 சிலைகளை ஆய்வு செய்தோம். இதேபோல் மாரியம்மன் கோயிலில் 19 சிலைகளை ஆய்வு செய்தோம்.  இந்த ஆய்வுகளின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கூடுதல் தகவல்களை தெரிவிக்க இயலாது. இவ்வாறு நம்பிராஜன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: