மழையால் சீசன் முன்கூட்டியே முடிந்தது காற்றாலை மின் உற்பத்தி கடந்த ஆண்டைவிட 10% குறைவு

கோவை: தமிழகத்தில் 12,800 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை 7,860 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. தென்மேற்கு பருவகாற்று காலம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையாகும். இக்காலத்தில் வீசும் காற்றின் மூலம் காற்றாலைகள் இயங்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு காற்று சீசன் ஒரு மாதம் தாமதமாக தொடங்கியது. கடந்த மே 15 முதல் ஜூலை 15 வரையிலான 2 மாதத்தில் தினமும் சராசரியாக 9 கோடி யூனிட் அளவிலான 4,600 மெகாவாட் திறன் மின் உற்பத்தியானது. ஆகஸ்ட் மாதத்தில் தினமும் சராசரியாக 10 கோடி யூனிட் உற்பத்தியாகியது.

செப்டம்பர் மாதத்தில் காற்று குறைய தொடங்கியதால், மின் உற்பத்தியும் குறைந்தது. சராசரியாக தினசரி 1.50 கோடி யூனிட் மட்டுமே உற்பத்தியானது. இம்மாதத்தில் ஆரம்பம் முதலே வெகுவாக குறைந்து கடந்த ஒரு வாரமாக முழுமையாக நின்றுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது: கடந்த ஆண்டு ஒரு மாதம் முன்கூட்டியே மார்ச் மாதமே சீசன் தொடங்கி, ஒரு மாதம் தாமதமாக அக்டோபர் வரை நீடித்தது. இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக துவங்கி, ஒரு மாதம் முன்கூட்டியே முடிந்துள்ளது. காரணம், இந்த ஆண்டு நிலவிய மழையின் காரணமாக காற்று வீசுவது தடைபட்டது. இதனால், கடந்த ஆண்டைவிட காற்றாலைகள் உற்பத்தி 10 சதவீதம் குறைந்தது. கடந்த ஆண்டு சீசனில் மொத்தம் 104 கோடி யூனிட் மின்சாரம், அதிகபட்சம் 5,470 மெகாவாட் திறனுடன் உற்பத்தியானது. இந்த ஆண்டு 95 கோடி யூனிட் மின்சாரம் அதிகபட்சம் 5 ஆயிரம் மெகாவாட் திறனுடன் மட்டுமே உற்பத்தியாகியுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: