மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் காணாமல் போன விவகாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி திடீர் ஆய்வு: கூடுதல் ஆணையர் திருமகளிடம் துருவி, துருவி விசாரணை

சென்னை:  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ல் கும்பாபிஷேம் நடந்தது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புன்னைவனநாதர் சிலை, ராகு, கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாக கூறி அதை மாற்ற முடிவு செய்து,  இரவோடு, இரவாக சிலைகளை மாற்றியதாக கூறப்படுகிறது. சிலைகளை கோயிலில் இருந்து கடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முதற்கட்டமாக ஆகஸ்ட் 13ம் தேதி 50க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்களிடமும், ஆகஸ்ட் 14ம் தேதி இணை ஆணையர் காவேரியிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிலை மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோயில்களில் உள்ள சிலைகளின் விவரங்கள், பழைய சிலைகள் மாற்றப்பட்டவை எத்தனை, கடந்த 2004ல் கும்பாபிஷேகத்தின் போது மேற்கொண்ட பணிகள், புன்னைவனநாதர், ராகு, கேது சிலைகளின் பழைய வடிவமைப்பு படங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தர வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோயில் இணை ஆணையர் காவேரியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணை ஆணையரிடம் இருந்து அந்த ஆவணங்களை பெற்று சென்றுள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கோயில் நிர்வாகத்திடம் சிலை மாற்றியதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து சிலை மாற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை எதுவும் அறநிலையத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பான ஆவணங்கள் தருமாறு அறநிலையத்துறை ஆணையர் டிகே.ராமச்சந்திரனுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு ஆணையர் தரப்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நேற்று மாலை 4.30 மணியளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அவர் கோயிலில் புன்னை வனநாதர் சன்னதியில் திடீரென ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கோயில் இணை ஆணையர் காவேரி, கூடுதல் ஆணையர் திருமகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, புன்னை வனநாதர் சன்னதியில் மயில் வாயில் பூ சிவனை பூஜை செய்வது போன்று அல்லாமல் மயில் வாயில் பாம்பு இருப்பது போன்று அமைக்கப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், 3 சிலைகளையும் திடீரென மாற்றியது ஏன், அந்த சிலைகள் மாற்றப்பட்டதற்கான ஆதாரம் எங்கே, தற்போது அந்த சிலைகள் எங்கு இருக்கிறது, சிலை புதைக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினார். அப்போது, கூடுதல் ஆணையர் திருமகள் பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்தார். சுமார் 1.30 மணி நேரத்திற்கு மேலாக அவர் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து, மேலும் திருமகளிடம் சில மாற்றியது தொடர்பாக ஆவணங்கள் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை தொடர்ந்து கூடுதல் ஆணையர் திருமகளிடம் இன்று காலை மீண்டும் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: