கொரில்லா ஆயுதப் போராட்டம் நடத்த மாவோயிஸ்ட் திட்டம் தமிழக-கேரள-ஆந்திர வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு

மஞ்சூர்: கொரில்லா ஆயுதப் போராட்டம் நடத்தப்போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளதால், தமிழக-கேரள-ஆந்திர எல்லையோர வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்குதேச கட்சி எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள்  எம்.எல்.ஏ. ஆகிய 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்தனர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாவோயிஸ்டுகள் 3 பேரின் புகைப்படங்களை ஆந்திர போலீசார் நேற்று முன்தினம் வெளியிட்டனர். மேலும், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து கொரில்லா ஆயுதப் போராட்டம் நடத்தப்போவதாக மாவோயிஸ்டுகள் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால், 3 மாநில எல்லைப்பகுதிகளில் உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் தமிழகத்தின் கர்நாடகா, ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் மாவோயிஸ்டுகள் இங்கு ஊடுருவியுள்ளார்களா? என்பதை கண்காணிக்க எல்லைப்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார், வேலூர் மாவட்ட மலைக்கிராமங்களான கருங்காலிகுப்பம், வரகூர்புதூர், மேட்டுக்குடிசை, நொறுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கிராம மக்களிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். மேலும் எல்லையோர கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.பி. சண்முகபிரியா உத்தரவின்பேரில், தமிழக, கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. மோகன்நிவாஸ் உத்தரவின் பேரில் நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ. பழனிசாமி, தலைமை காவலர் சார்லஸ் ஆகியோர் மேற்பார்வையில் 20க்கும் மேற்பட்ட அதிரடி படையினர் தமிழக-கேரளா எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிரடி படை போலீசாருக்கு நவீன துப்பாக்கிகளுடன், குண்டு துளைக்காத ஜாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: