ரூ.5,000 கோடி வங்கி மோசடி வழக்கு : நிதின் சந்தேசரா நைஜீரியாவில் தஞ்சம்

புதுடெல்லி,: இந்தியாவில் ₹5 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத்தை சேர்ந்த நிதின் சந்தேசரா மற்றும் அவரது குடும்பத்தினர் நைஜீரியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆந்திரா வங்கியில் ₹5 ஆயிரம் கோடி நிதி மோசடி செய்ததாக குஜராத்தின் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன உரிமையாளர் நிதின் சந்தேசரா அவரது சகோதரர் சேதன் சந்தேசரா மைத்துனி தீப்தி பென் சந்தேசரா உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கில் ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் தீக்‌ஷித், விலாஸ் ஜோஷி, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஹேமந்த் ஹதி, முன்னாள் ஆந்திர வங்கி இயக்குநர் அனூப் கார்க் உள்ளிட்டவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 சந்தேசராவின் குடும்பத்தினர் அரபு நாடுகளுக்கு தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் நிதியை அவர் பினாமி பெயரில் வெளிநாடுகளுக்கு திருப்பி விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சந்தேசரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ககன் தவான் மற்றும் கார்க் ஆகியோரை கைது செய்த அமலாக்கத்துறை, சந்தேசராவின் ₹4,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஜூன் மாதத்தில் முடக்கியது. மேலும் சந்தேசராவை கைது செய்து இந்தியா அழைத்துவரவும் நடவடிக்கை மேற்ெகாண்டது. இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் துபாயில் வைத்து அவர், கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது உண்மையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னதாகவே சந்தேசரா மற்றும் அவரது குடும்பத்தினர் நைஜீரியாவில் தஞ்சமடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களை மீண்டும் இந்தியா கொண்டுவரும் பொருட்டு யூஏஇ அதிகாரிகளுக்கு கோரிக்கை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்டர்போல் மூலம் அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, அவர்கள் இந்திய பாஸ்போட்டை பயன்படுத்தி நைஜீரியாவிற்கு சென்றார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இருந்து கைதிகளை இந்தியா கொண்டுவர எந்த ஒப்பந்தமும் இல்லாததால், இவர்கள் நைஜீரியாவில் தஞ்சமடைந்திருக்கலாம் என்றும்

கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: