தர்மபுரி மாவட்டத்தில் சாக்பீஸ் உற்பத்தி 10 சதவீதம் சரிவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்யும் பருவமழையாலும், போதிய வெயில் இல்லாததாலும் சாக்பீஸ் உற்பத்தி, விற்பனை 10 சதவீதம் பாதிப்படைந்துள்ளது. தயாரித்த சாக்பீஸ்களை வெயிலில் காயவைக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சாக்பீஸ் உற்பத்தியில் முதன்மையாக விளங்குவது தர்மபுரி மாவட்டமே. தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சிறிய அளவிலான 50க்கும் மேற்பட்ட சாக்பீஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. போதிய விற்பனை இல்லாததால் ஒரு சில நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தர்மபுரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏமக்குட்டியூரில் சாக்பீஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்நிறுவனத்தில் பல்வேறு வண்ணங்களில் சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

இந்த சாக்பீஸ்கள் 100 எண்ணிக்கையில் சிறிய அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் அனுப்பப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவிற்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சாக்பீஸ்களை உலரவைப்பதில் தாமதம் உள்ளது. மேலும், உற்பத்தியும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.இது குறித்து சாக்பீஸ் நிறுவன அதிபர் முனியப்பன் கூறியதாவது: கடந்த 13 ஆண்டுகளாக சாக்பீஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். தினமும் ஒரு டன் சாக் மாவின் மூலம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 800 சாக்பீஸ்கள் உற்பத்தி செய்யலாம். இவற்றை 24 பெட்டிகளில் வைத்து 80 பண்டல்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். எங்களது விற்பனை பெரும்பாலும் கர்நாடகா மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நாங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். ஒரு பாக்ஸ் வெள்ளை சாக்பீஸ் ₹20க்கும், கலர் சாக்பீஸ் பெட்டி ₹26க்கும் விற்பனை செய்கிறோம். தற்போது நவீன டிஜிட்டில் போர்டுகள் வந்துவிட்ட போதும் இன்னும் சாக்பீஸ்களுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் டிஜிட்டல் மயத்தால், கடந்தாண்டை விட நடப்பாண்டில் உற்பத்தி மற்றும் விற்பனை 10 சதவீதம் சரிந்து விட்டது. தற்போது மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் வெயிலில் சாக்பீஸ்களை காயவைக்க முடியவில்லை. இதனால் தினமும் அனுப்புவதற்கு பதில் 2 நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாக்பீஸ்களை விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: