கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் திடீர் நிறுத்தம்: பணி, உரம் வாங்க பணம் இன்றி டெல்டா விவசாயிகள் தவிப்பு

மணப்பாறை: தமிழகம் முழுவதும் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் 4,464 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன், மத்திய கால கடன் வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகள் 9.25 சதவீத வட்டிக்கு வழங்குகின்றன. கூட்டுறவு சங்கங்கள் 11.25 சதவீத வட்டிக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்குகின்றன. மத்திய கூட்டுறவு வங்கிகள் மாதந்தோறும் வட்டி மற்றும் அசலை கூட்டுறவு சங்கங்களிடம் வசூலித்து விடுகின்றன. அதேசமயம் தண்ணீரின்றி விவசாயம் பொய்த்துப்போனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடம் வட்டி மற்றும் அசல் வசூலிப்பது பெரும் சிரமமாக உள்ளது. இதனால் பல கூட்டுறவு சங்கங்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இந்த சிக்கலை போக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ம் தேதி முதல் கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதை நிறுத்தி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடக்க வேண்டும்.

ஆனால் நடவு, உழவு பணி, உரம் ஆகியவற்றுக்கு கடன் கிடைக்காமல் விவசாயிகள் நடவு பணி பாதிக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் மாநில செயலாளர் துரைக்கண்ணு கூறுகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சதவீத வட்டிக்கு தான் விவசாய கடன் வழங்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும், மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் நபார்டு வங்கி தான் நிதி வழங்குகிறது. ஆனால் அந்த வங்கிகள் மட்டும் 4 சதவீத வட்டியே வசூலிக்கின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு 9.25 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த முரண்பாடுகளை களைய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் சில ஏஜென்சிகளை நியமித்துள்ளன. இந்த ஏஜென்சிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேசிய வங்கிகளுக்கு அழைத்து சென்று விடுகின்றன. அங்கு ரூ.1 லட்சம் வரை கடன் வாங்க எந்த ஆவணமும் தேவை இல்லை. வட்டியும் குறைவாக இருப்பதால், விவசாயிகள் தேசிய வங்கிகளை நாடுகின்றனர். இதனால் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் செய்த கூட்டுறவு கடன் சங்கங்கள்,  தற்போது ரூ.1 கோடி, 50 லட்சத்துக்கு தள்ளப்பட்டு நலிந்து கொண்டிருக்கின்றன. மேலும் கடன் வாங்கும் விவசாயிகளிடம் உரம் வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்துகிறது. இதனாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்னைகளை எல்லாம் தீர்க்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை முதல் கடன் வழங்குவதை நிறுத்தி விட்டோம்.

5 நாட்களாக எந்த கடனும் வழங்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ, வேளாண் துறை செயலாளரோ இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. வரும் 26ம் தேதி சென்னையில் உள்ள மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டாவிட்டால், போராட்டம் தொடரும் என்றார்.தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில்,  உரிய காலத்தில் பயிரிட்டு பணி மேற்ெகாண்டால் தான் பயிர்களை பாதுகாக்க முடியும். கடலில் கலந்து தண்ணீர் வீண், முக்கொம்பு அணை உடைப்பு ஆகியவற்றால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைமடை பகுதிகளில் தினமும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கூட்டுறவு கடன்களையும் நிறுத்தி இருப்பது மேலும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விளைபொருள் உற்பத்தி ஆரம்ப நிலையிலேயே பாதிக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கூட்டுறவு சங்க பணியாளர்களை அழைத்து பேசி போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: