ரூபாய் மதிப்பு சரிவால் நேர்ந்த அவலம் : பங்குச்சந்தை பணம் ரூ.3.62 லட்சம் கோடி காலி

புதுடெல்லி: ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்கா - சீனா வர்த்தகப்போர் போன்ற காரணங்களால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 3 நாட்களில் ₹3.62 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. நேற்று 2 மாதங்களில் இல்லாத அளவாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 37,121.22  புள்ளிகளாக சரிந்தது. முந்தைய நாளை விட 169.45 புள்ளிகளை இழந்தது.  இந்த வாரத்தில் கடந்த திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து 3 நாட்களில் மும்பை பங்குச்சந்தையில் 970 புள்ளிகள் வீழ்ந்துள்ளன. இதற்கு ரூபாய் மதிப்பு சரிவு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அடுத்ததாக, அமெரிக்கா - சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப்போர் இந்திய பங்குச்சந்தையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு ₹3,62,357.15  கோடி சரிந்து, ₹1,52,73,265 கோடியாக குறைந்துள்ளது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் நிப்டி 280 புள்ளிகளை இழந்துள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சீனாவுடன் உள்ள வர்த்தக பற்றாக்குறையை தீர்க்கவும், அமெரிக்க தொழில்துறையை பாதுகாக்கவும் சீன பொருட்களுக்கு வரி மேல் வரியை விதித்து வருகிறது அமெரிக்கா. இதற்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் பழிக்கு பழியாக அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் 20,000 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தது. இதுபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் அதல பாதாளத்துக்கு சரிந்து வந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பங்கு முதலீட்டாளர் ஒருவர் கூறுகையில், சர்வதேச சந்தை நிலவரங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், சர்வதேச சந்தைகள் சற்று சாதகமாக மாறினாலும் ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கம் குறையவில்லை என்றார்.

 தொடர்ந்து பங்குச்சந்தையில் சரிவு ஏற்படுவது முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியர்கள் பங்குச்சந்தையில் துணிகர முதலீடு மேற்கொள்வது குறைவுதான். பங்குச்சந்தை போக்கை நீண்ட காலமாக கண்காணித்து வருபவர்களே கூட இழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பங்கு முதலீடுகள் சரிந்து, குறைந்த லாபம் கிடைத்தாலும் நிலையான வருவாய் உள்ள சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும் என்று சந்தை நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: