கொள்ளிடம் பாலப்பணிக்கு விரிசல் விழுந்த கான்கிரீட் உத்தரங்களை பயன்படுத்தலாமா? திருச்சி என்ஐடி, வல்லுனர் குழுவினர் ஆய்வு

திருச்சி:கொள்ளிடம் புதிய பாலப்பணிக்காக தயாரிக்கப்பட்ட கான்கிரீட் உத்தரங்கள் விரிசல் விழுந்ததால் அவற்றை மீண்டும் பயன்படுத்துவது குறித்து திருச்சி என்ஐடி மற்றும் பொதுப்பணித்துறை வல்லுனர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.திருச்சி மாவட்டத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் பூண்டி, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்லணை வழியாக செல்லலாம். ஆனால் இந்த வழித்தடத்தில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாது. கல்லணையில் கார், வேன் போன்ற வாகனங்கள்தான் செல்ல முடியும். எனவே பூண்டி, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் செங்கிப்பட்டி சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். இதனால் பல 15 கி.மீ. கூடுதலாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனை தவிர்க்கும் வகையில் கல்லணை அருகே புதிய பாலம் கட்ட 64 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு கல்லணை கொள்ளிடம் ஆற்றில் 1.052 கி.மீ. நீளத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலத்தில் ஒரேநேரத்தில் 3 பஸ்கள் செல்லும் வகையில் 42 மீ. அகலத்தில் பாலம் கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக 24 பிரமாண்ட தூண்களும் அமைக்கப்பட்டு அதில் உத்தரங்களை பொருத்தும் பணி நடந்து வந்தது.

இதற்காக கான்கிரீட் உத்தரங்கள் தயாரிக்கப்பட்டு பொருத்துவதற்கு வைக்கப்பட்டு இருந்த நேரத்தில் கடந்த மாதம் கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் உத்தரங்கள் பொருத்தும் பணி தடைபட்டது. இந்நிலையில் வெள்ளம் வடிந்தபின் பார்த்தபோது உத்தரங்கள் பாதிக்கப்பட்டு விரிசல் விட்டது. இதில் 25 உத்தரங்கள் சேதமடைந்து விட்டது. அதையே தூக்கி பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக, பாலப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, `கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 27 உத்தரங்கள் சேதமடைந்து உள்ளது. அதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது’ என்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 12.45 மணிக்கு திருச்சி என்ஐடி சிவில் துறை தலைவர் நடராஜன், பொதுப்பணித்துறை பொறியாளர் சூரியநாராயணன் ஆகியோர் தலைமையில் 5 பேர் அங்கு வந்து சேதமடைந்த உத்தரங்களையும், பாலத்தின் கட்டுமானங்களையும் ஆய்வு செய்து சென்றனர். உத்தரங்கள் எந்த அளவு சேதம் அடைந்து உள்ளது என்பது பற்றி, ஆய்வு முடிவில் அறிவிப்பார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: