மருத்துவமனையில் ஜெ., அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிகிச்சை வீடியோ அழிப்பு : அப்போலோ நிர்வாகம் வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் அழிந்து விட்டது  என்று விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை அளித்துள்ள வாக்குமூலத்தால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் 85க்கும் மேற்பட்டவரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில், அப்போலோ டாக்டர்கள் அளித்த வாக்குமூலத்திலும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மருத்துவ குறிப்பிலும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது யார், யார் சந்தித்தார்கள் என்பதும் தற்போது வரை குழப்பமாக உள்ளது.

எனவே, ஆணையம் சார்பில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் 75 நாட்கள் உள்ள சிசிடிவி கேமரா பதிவை 7 நாட்களுக்குள் தர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி, சிசிடிவி கேமரா பதிவுகளை கேட்ட போது, அவர் முக்கிய பிரமுகர்கள் சிசிச்சை பெறும் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் வைப்பது இல்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா கூட ஆப் செய்யப்பட்டதாக தெரிவித்தார். ஆணையம் சார்பில் சிசிடிவி பதிவை ஆப் செய்ய சொன்னது யார் என்று கேட்டதற்கு அவர் தெரியாது என்றார்.

இதை தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உள்ள சிசிடிவி கேமரா பதிவை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, 7 நாட்களான நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா 25ம் தேதி மீண்டும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், அப்போலோ நிர்வாகம் தரப்பில் சிசிடிவி கேமரா பதிவு குறித்து ஆணையத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி வீடியோ பதிவுகள் அழிந்து விட்டது. அப்போலோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில் ஒரு மாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே சேமிக்க முடியும். புதிதாக பதிவுகள் சேரும் பொழுது பழைய பதிவுகள் தானாக அழிந்து விடும். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் இல்லை. எனவே, சிசிடிவி பதிவை தாக்கல் செய்ய இயலாது என்று கூறப்பட்டுள்ளது.ஆனாலும், விசாரணை ஆணையம் சிசிடிவி காட்சிகள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி பதிவு சர்வரை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்து அதில் பழைய பதிவுகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வைப்பதில்லை என்று அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது. எனவே, இது தொடர்பாக மருத்துவ ஆய்வகங்களிடம் விசாரணை ஆணையம் விளக்கம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செப்டம்பர் 25ம் தேதி ஆணையத்தில் ஆஜராகும் சுப்பையாவிடம் சிசிடிவி பதிவுகள் அழிந்து போனது தொடர்பான விளக்கங்களை கேட்க ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: