கோவையில் பாக்கு கொள்முதல் மையம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

கோவை: கோவையில் பாக்கு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, தேக்கம்பட்டி, வேடபட்டி, சுண்டபாளையம், தெலுங்குபாளையம், பேரூர், ஆலாந்துறை, நஞ்சுண்டாபுரம், செம்மேடு, நரசிபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் 5  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்கு சாகுபடி நடக்கிறது. ஆகஸ்ட் முதல் மார்ச் வரை பாக்கு சீசனாகும். தற்போது அறுவடை நடந்து வருகிறது. பதப்படுத்தப்பட்ட பாக்கு ₹400க்கு விற்கப்படுகிறது. பதப்படுத்தபட்ட பாக்கு  விற்பனை சந்தை கர்நாடகா மாநிலம் சிமோகாவில் உள்ளது. அங்கிருந்து வெள்ளை பாக்கு பீடா, பான் மசாலா, சீவல் ஆகிய தயாரிப்பிற்கு வட மாநிலத்திற்கும், கொட்டை பாக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்  விற்பனையாகிறது.

தமிழகத்தில் கோவை தவிர சேலம், தருமபுரி, மதுரை, நாமக்கல், கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாக்கு சாகுபடி நடக்கிறது. இங்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாக்கிற்கு உரிய விலை  கிடைப்பதில்லை. அதுபோல் கர்நாடகா மாநிலம் சிமோகாவில் பாக்கு சந்தையிலும் பதப்படுத்தப்பட்ட பாக்கிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் அவ்வப்போது நஷ்டமடைந்து வருகின்றனர். இதனால் பாக்கு சாகுபடி பரப்பும், விவசாயிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இது குறித்து கோவை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது: வறட்சியும், அளவுக்கு அதிகமான தண்ணீரும் பாக்கு சாகுபடியை பாதிக்க கூடியவை.

மேலும் நோய் தாக்குதலும் மகசூல் குறைய காரணமானவை. இதனால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் பாக்கு விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்குவதில்லை. தமிழகத்தில் பாக்கு கொள்முதல் மையம் இல்லாததால்,  விவசாயிகள் தங்கள் பச்சை பாக்குகளை பதப்படுத்தி, நேரடியாக விற்பனை செய்வதில்லை. இதனால் நஷ்டமடைந்து வருகின்றனர்.இதை தவிர்க்க கோவையில் பாக்கு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு சங்க கிடங்குகளில் 6 மாதக்காலம் வரை இருப்பு வைக்கவும்,அதன்பேரில் பொருளின் மதிப்பில் 50 சதவீதம் வரை கடனுதவியும்  வழங்கினால், விலை சரிவில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள்.இவ்வாறு பழனிசாமி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: