நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: “மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில், அது தொடர்பாக தலையிட முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜசேகரன் என்பவர் சாலை பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் பொது நலன் வழக்காக ஏற்று விசாரணை நடத்தி வருகின்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் கூறுகையில், ‘‘தற்போதுள்ள திட்டத்தின்படி, வாகனம் மோதி இறந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.12 ஆயிரம்  வழங்கப்படுகின்றது. திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திருத்தத்தின்படி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும். மத்திய அரசு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வரை சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க தயாராக உள்ளது.

எனவே அதே தொகையை வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவிடவேண்டும்.” என்றார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி அனந்த், “மோட்டார் வாகன திருத்த மசோதா-2017 மாநிலங்களவையில் நவம்பரில் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரின்போது எடுத்துக்கொண்டு நிறைவேற்றப்படும். மோட்டார் வாகன திருத்த மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளதால் அரசால் எதையும் செய்ய இயலாத நிலை உள்ளது” என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, “மாநிலங்களவையில் இந்த விஷயம் நிலுவையில் உள்ளது. இதில் எவ்வாறு நாங்கள் தலையிட முடியும். நாடாளுமன்ற செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது’’ என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: