இலங்கை தேயிலை தோட்டங்களில் தமிழர்களுக்காக கட்டிய வீடுகளை ஒப்படைத்தது இந்தியா: காணொளி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

கொழும்பு: இலங்கை தேயிலை தோட்டங்களில் தமிழர்களுக்காக கட்டிய வீடுகளின் முதல் தொகுப்பை இந்தியா நேற்று ஒப்படைத்தது. காணொளி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இலங்கையில் உள்ள தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களில் பணியாற்ற, இந்தியாவில் உள்ள தமிழர்களை இங்கிலாந்து ஆட்சியாளர்கள் கடந்த 19ம் நூற்றாண்டில் அழைத்துச் சென்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். தினக் கூலிகளாக பணியாற்றும் இவர்களுக்கு இலங்கை குடியுரிமை இருந்தாலும், இவர்கள் குடியிருக்க சரியான வீடுகள் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு 350 மில்லியன் டாலர் செலவில் (ரூ.24 ஆயிரம் கோடி)  60 ஆயிரம் வீடுகளை கட்டித்தர இந்தியா முன்வந்தது. இவற்றில் இதுவரை 47 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் நுவாரா எலியா பகுதியில் உள்ள டுன்சினானே எஸ்டேட் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட 404 வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, இலங்கை அமைச்சர்கள் பழனி திகாம்பரம், நவீன் திசாநாயகே, மற்றும் ஞானந்தா கருணாதிலகே ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழர்களுக்கு நில உரிமையுடன் இந்த வீடுகளை பிரதமர் ரணில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:இலங்கைக்கு அமைதியான, பாதுகாப்பான, வளமான எதிர்காலம் உருவாக வேண்டும் என இந்தியா எப்போதும் நினைக்கிறது. அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற அடிப்படையில் இலங்கையை இந்தியா தொடர்ந்து சிறப்பான இடத்தில் வைத்துள்ளது. 350 மில்லியன் டாலர்(ரூ.24 ஆயிரம் கோடி) செலவில் இலங்கையில் கட்டப்படும் 60 ஆயிரம் வீடுகளில், 47 ஆயிரம் வீடுகள் நிறைவடைந்துள்ளன. இது வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்ட மிகப் பெரிய உதவி திட்டம். இங்குள்ள தமிழர்கள் இலங்கையில் வளர்ந்தாலும், உங்களது வேர் இந்தியாவில் உள்ளது. நீங்கள் இரு நாடுகளை மட்டும் இணைக்கவில்லை. இரு சிறந்த நாடுகளின் இதயங்களையும் ஒன்று சேர்ந்து கைகளையும் வலுப்படுத்தியுள்ளீர்கள். இன்று நாங்கள் உங்களுக்கு புதிய எதிர்க்காலத்தை ஒன்றாக இணைந்து வழங்கியுள்ளோம். இது இந்தியா-இலங்கை உறவில் புதிய உச்சம். கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டத்தரவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார். இலங்கை பிரதமர் ரணில் பேசுகையில், ‘‘வீட்டு வசதி உட்பட இலங்கையின் வளர்ச்சி திட்டங்களில் இந்தியா பங்கெடுப்பது பாரட்டத்தக்கது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: