ஊதிய உயர்வு வழங்க கோரி ஆக.1 முதல் தொடர் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு குழு அறிவிப்பு

சேலம்: ஊதிய உயர்வு வழங்க கோரி, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பல்வேறு கட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் போராட்ட விளக்க கூட்டம் சேலத்தில் குழு தலைவர் மருத்துவர் செந்தில் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர், கூட்டு நடவடிக்கை குழு தலைவர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்திற்கும், மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் ₹1 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை வித்தியாசம் உள்ளது. 20 ஆண்டுகள் பணியாற்றி வரும் மத்திய அரசு மருத்துவர் ₹2.80 லட்சம் ஊதியம் பெறுகிறார். ஆனால், 20 ஆண்டு பணியாற்றி வரும் மாநில அரசு மருத்துவர் 1.60 லட்சம் தான் ஊதியம் பெறுகிறார். இந்த மிகப்பெரிய வித்தியாசத்தை சரி செய்து, மாநில அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும். இக்ேகாரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், அரசு கண்டுகொள்ளவில்லை.

இதன்காரணமாக மாநிலம் முழுவதும் பணியாற்றும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவார்கள். 5ம் தேதி முதல் 18ம் தேதி வரை மருத்துவர்களிடையே கோரிக்கையை விளக்கும் நடவடிக்கைகள் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டமும், 24ம் தேதி அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்கப்படுகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி ஒத்துழையாமை இயக்கம் நடத்தி, அரசு அலுவல் கூட்டங்களை புறக்கணிக்கவுள்ளோம். அன்றைய தினம் நோயாளிகள் பாதிக்காதவாறு, மருத்துவ பணியை செய்வோம். செப்டம்பர் 12ம் தேதி கோட்டையை நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்கவுள்ளோம். இதன்பின்னும் எங்கள் கோரிக்கையை ஏற்று ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு மருத்துவருக்கு இணையாக வழங்காவிட்டால், செப்டம்பர் 21ம் தேதி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். அப்போதும் கோரிக்கை நிறைவேறாவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி கூட்டு நடவடிக்கை குழு கூடி முடிவு செய்து அறிவிக்கும்.இவ்வாறு குழுதலைவர் செந்தில் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: