நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ராகுல் தனித்தனியாக ஆலோசனை ; மண்டல வாரியாக தமிழகத்தில் சுற்றுப்பயணம்

புதுடெல்லி : நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ராகுல்காந்தி தனித் தனியாக சந்தித்து கருத்து கேட்டார். தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, வசந்தகுமார், பிரின்ஸ், மலேசியா பாண்டியன், காளிமுத்து, விஜயதரணி, ராஜேஷ், கணேஷ் ஆகிய 8 பேருக்கும் டெல்லி மேலிடத்தில் இருந்து ராகுல்காந்தியை சந்திக்க அழைப்பு வந்தது. இதையடுத்து, அவர்கள் நேற்று முன்தினம் உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் நேற்று மாலை 3.30 மணி அளவில் டெல்லியில் உள்ள இல்லத்தில் ராகுல்காந்தியை நேரில் சந்தித்தனர். அப்போது தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் உடனடிருந்தனர். அதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரையும் அழைத்து ராகுல்காந்தி தனித்தனியாக கருத்துகளை கேட்டார்.

ஒவ்வொருவரிடமும் நீண்ட நேரம் உரையாடினார். குறிப்பாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அளவுக்கு வாக்கு சதவீதம் உள்ளது, கட்சி வளர்ச்சியடைந்துள்ளதா அதற்காக நீங்கள் எடுத்த முயற்சி என்ன? போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு எம்எல்ஏக்களை திக்குமுக்காட செய்தார். ஒவ்வொருவரும் தாங்களது கருத்துகளை ராகுல்காந்தியுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் மூத்த தலைவர்களின் ஒவ்வொருவரின் நடவடிக்கைகள் குறித்து ரகசியமாக விசாரித்துள்ளார். கட்சி பணிகளில் விறு விறுப்பாக செயல்படுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். கட்சியில் இளைஞர்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளது?, அவர்களை நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் காங்கிரசை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது குறித்தும், அதற்காக, தான் தமிழகத்தில் அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் தெரிவித்துள்ளார். மண்டல வாரியாக கட்சியினரை சந்திப்பதுடன் ரோடு ஷோ, பொதுக்கூட்டம் என தமிழகத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக உறுதியளித்துள்ளார். ராகுல்காந்தியின் எம்எல்ஏக்களுடனான தனித் தனியான இந்த சந்திப்பு தமிழக காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல்காந்தியை சந்திக்க கடந்த ஒரு வாரமாக திருநாவுக்கரசர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் நேற்று தான் ராகுல்காந்தியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: