7 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் : கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: சென்னை உட்பட 7 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளின் பெயர்களை கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக தாஹில்ரமணியை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இதே போல, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி ராஜேந்திர மேனன், ஜம்மு காஷ்மீருக்கு நீதிபதி கீதா மிட்டல், கேரளாவுக்கு ஹிரிஷிகேஷ் ராய், ஒடிசாவுக்கு ஜாவேரி, ஜார்க்கண்ட்டுக்கு அனிருத்தா போஸ் மற்றும் பாட்னாவுக்கு எம்.ஆர்.ஷா ஆகியோர் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்திரா பானர்ஜி தவிர, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரணை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. மேலும், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவரது பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு கொலிஜியத்திற்கு திருப்பி அனுப்பியது. மேலும், நீதிபதி ஜோசப் விவகாரத்தை மிகுந்த கவனத்துடன் கையாளுமாறு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 2 கடிதங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், குரியன் ஜோசப் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய கொலிஜியம் கடந்த 16ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது.

இக்கூட்டத்தில் மீண்டும் ஜோசப்பை பரிந்துரை செய்வதென தீர்மானிக்கப்பட்டது. நீதிபதி ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைப்பதில் எந்த எதிர்மறை விஷயங்களும் இல்லை என கொலிஜியம் கூறியிருக்கிறது. ஏற்கனவே அரசியல் காரணங்களுக்காவே ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க மத்திய அரசு தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது 2வது முறையாக ஜோசப்பை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: