கோவை: தமிழகத்தில் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயின் தாக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் மறைக்கப்படுகிறது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் கடந்த ஒரு ஆண்டில் 71 அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் எச்.ஐ.வி தொற்று சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, 39,661 பாலியல் தொழிலாளர்கள், 28,451 ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், 3,272 திருநங்கைகள், ஊசி மூலமாக போதை மருந்து செலுத்தும் பழக்கமுள்ள 344 பேர், பல்வேறு வகையான புலம் பெயர்ந்த தொழில் செய்பவர்கள் 25,065 பேர் இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த பரிசோதனையில் கிடைத்த தகவல் அடிப்படையில், மாநில அளவில் 2,374 ஆற்றுப்படுத்துதல் மையங்கள் மூலமாக எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை, மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ஏ.ஆர்.டி என்ற கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் (சிடி4) எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டாக எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் சிகிச்சை பெறுவது கணிசமாக குறைந்துவிட்டது. எய்ட்ஸ் நோயாளிகளின் இறப்பு மருத்துவ ரீதியாக பதிவு ெசய்யப்படுவதில்லை. இதனால் நோயின் தாக்கம், நோயாளிகளின் நிலை குறித்த விவரங்கள் துல்லியமாக தெரியாத நிலை இருக்கிறது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, மாநில அளவில் 1.13 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் எய்ட்ஸ் பாதிப்பில் இருந்த சுமார் 12 ஆயிரம் பேரும், நடப்பாண்டில் 5 மாதத்தில் சுமார் 6500 பேரும் இறந்து விட்டனர் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள் காசநோய், சுவாச நோய் பாதிப்பு காரணமாக இறந்துவிட்டனர் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோய் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு துல்லியமான தகவல் வெளியிடாமல் மறைப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பொது சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பாண்டில் மே மாதம் வரை 19,007 காசநோயாளிகளில் 966 பேர் எய்ட்ஸ் பாதிப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. எய்ட்ஸ் பாதிப்பில் உள்ளவர்களை மீட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும் அவர்களின் வாழ்நாள் நீட்டிப்புக்கான சிகிச்சை தீவிரமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு சுகாதார துறை அதிகாரி கூறினார்.எச்.ஐ.வி கிட் இல்லைமாநில அளவில் அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோய் தடுக்கும் வகையிலான கையுறை, உடல் கவசம் கொண்ட ‘எய்ட்ஸ் கிட்’ வைத்திருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பிரேத பரிசோதனை கூடங்களில் இந்த ‘’கிட்’’ வைத்திருக்கவேண்டும். ஆனால், ‘’எய்ட்ஸ் கிட்’’ இல்லாமல் முக்கிய சிகிச்சை பிரிவுகள் செயல்படுகிறது. ரத்த பரிசோதனையில் நோயாளிக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தால் அவரை ெதாடுவதற்குகூட டாக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர். நிதி முடக்கம்...எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்னேற்றத்திற்காக, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் ₹9.5 ேகாடி மூலாதார நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, எய்ட்ஸ் நோயாளிகளின் குடும்பத்தினர் மேம்பாடு மற்றும் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்த வேண்டும். ஆனால், நிதி பயன்படுத்தப்படவில்லை. முடங்கி கிடக்கிறது. இவ்வளவு நிதி ஒதுக்கியும், எய்ட்ஸ் நோயாளிகளின் குடும்பத்தினர் போதுமான உதவி கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!