ஆண்டிபட்டி மலைநெல்லிக்கு தலைநகரில் மவுசு அதிகம் : விவசாயிகள் பெருமிதம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மலை நெல்லிக்காய்கள், விற்பனைக்காக டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இதனைச் சுற்றியுள்ள புள்ளி மான்கோம்பை, தர்மத்துபட்டி, டி.அனைக்கரைபட்டி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 400 ஏக்கரில் மலை நெல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் காஞ்சனா, ஜி.எஸ்.ஆர், எஸ்.பி.எல் 7 உள்ளிட்ட ரகங்களை கொண்ட மலை நெல்லி 24 மாதங்களில் பலன் தரக் கூடியவை. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் காய்கள் சிறிதாக உள்ளதால் உரிய விலை கிடைப்பதில்லை. காற்றில் காய்கள் உதிர்வதால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இப்பகுதியில் விளையும் நெல்லிக்கு டெல்லியில் மவுசு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயி பாண்டி கூறுகையில், `‘மலை நெல்லி மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. டூத்பேஸ்ட், ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காயை மரத்திலிருந்து பறிக்க வேண்டும். பனிக்காலத்தில் நெல்லிக்காயின் எடை அதிகரிக்கும். காற்று காலத்தில் எடை குறைந்து காணப்படும். தண்ணீர் போதிய அளவு இருந்தால் ஆண்டுக்கு மூன்று முறையும், குறைந்தளவு தண்ணீர் இருந்தால் இரண்டு முறையும், சிறிதளவு தண்ணீர் இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பலன் தரும். தற்போது நெல்லியின் விலை 1 கிலோ ரூ.15 வரை செல்கிறது. ஆனால் கடைகளில் ரூ.50க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 15 டன் மலை நெல்லி வர வேண்டிய நிலத்தில் வெறும் 8 டன் மட்டுமே வருகிறது. தற்போது அறுவடை செய்யப்படும் மலைநெல்லி டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: