குடிமகன்களின் கூடாரமாக மாறிய வட்டமலை கரை ஓடை அணை: விவசாயிகள் அச்சம்

காங்கயம்: வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைக் கரை ஓடை அணை அதிகாரிகள் அலட்சியத்தால் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள உத்தமபாளையம் பகுதியில் வட்டமலை கரையை தடுத்து கட்டப்பட்டுள்ளது வட்டமலை கரை ஓடை அணை. சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அணையின் மூலம் வெள்ளக்கோவில், புதுப்பை, தாசனாயக்கன்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்து 50 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது வாய்க்கால்கள் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக, அணைக்கு போதிய தண்ணீர் வராததால் அணை திறக்கப்படவில்லை. தற்போது, அணை மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. இதனால், சுற்றியுள்ள விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். அணையில் சரியான கண்காணிப்பு இல்லாததால். மாலை நேரங்களில் குடிமகன்கள் வந்து கறி சமைப்பதும், கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதும், சீட்டு விளையாடுவது என சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் குடிபோதையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர்.

அணையின் பல இடங்களில் மதுபாட்டில் உடைக்கப்பட்டு ஆங்காங்கே போடப்பட்டுள்ளது. குடிமகன்கள் குடித்துவிட்டு பிளாஸ்டிக் டம்ளர்கள் அங்கேயே வீசி செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தும் வௌ்ளக்கோவில் போலீசார் கண்டுகொள்வதில்லை. விவசாயிகள் கூறுகையில்,`அணைக்கு பைக்குகளில் கூட்டமாக வந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து வீசுவதால் கால்நடைகளை மேய்க்க முடிவதில்லை. பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் கிடப்பதால் கால்நடைகள் இவற்றை திண்று விடுகிறது. விவசாய பணிக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: