பிரதமர் மோடி புகழாரம் இந்தியாவும், வங்கதேசமும் ஒத்துழைப்பால் பிணைப்பு

சாந்திநிகேதன்: ‘‘இந்தியாவும், வங்கதேசமும் ஒத்துழைப்பு,  புரிந்துணர்வால் பிணைக்கப்பட்டுள்ளன’’ என மோடி கூறினார். மேற்கு வங்கத்தில் உள்ள விஷ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வங்கதேச அரசால் கட்டப்பட்டுள்ள ‘வங்கதேச பவன்’ மையத்தை இருநாட்டு பிரதமர்களும் இணைந்து திறந்து வைத்தனர். பல்கலை.யின் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது: இந்தியாவும், வங்கதேசமும் ஒத்துழைப்பு, புரிந்துணர்வால் பிணைக்கப்பட்டுள்ளன.

இருநாடுகளின் கலாசாரம், கொள்கைகளை பரஸ்பரம் இருநாட்டு மக்களும் அதிகமாக கற்க வேண்டும். அதற்கு ‘வங்கதேச பவன்’ துணைப்புரியும். சாலைப் பணிகள், ரயில்வே, சர்வதேச நீர்வழிகள், ஏற்றுமதி போன்றவற்றில் இந்தியா-வங்கதேச நாடுகள் இணைந்து குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா-வங்கதேச நாடுகளின் உறவு பொன் அத்தியாயத்தில் பொறிக்கப்பட வேண்டியதாக உள்ளது. முன்னதாக கடல் எல்லை உள்ளிட்ட இருநாடுகளுக்கு இடையில் இருந்த சில பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் துவங்கப்பட்டுள்ள வங்கதேச பவனை போல, வங்கதேசத்தின் குஷ்தியா மாவட்டத்தில் உள்ள தாகூரின் இல்லத்தை புதுப்பிக்கும் பொறுப்பை இந்தியா மேற்கொண்டுள்ளது. வங்கதேசத்திற்கு இந்தியா வழங்கி வரும் 600 மெகாவாட் மின்சாரத்தை இந்த ஆண்டிற்குள் 1,100 மெகாவாட்டாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்களிடம் மன்னிப்பு

பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மோடி, மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் பேசுகையில், “நான் பல்கலைக் கழகத்திற்கு வந்தபோது சில மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்தேன். பல்கலைக் கழகத்தின் வேந்தராக இதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: