பாரதியார் பல்கலை. பேராசிரியர் லஞ்ச வீடியோ விவகாரம் உயர்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்ப பதிவாளர் முடிவு

கோவை: பேராசிரியர் லஞ்சம்  வாங்கியது போன்ற வெளியான வீடியோ குறித்து, உயர் கல்வித்துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்படும் என்று கோவை பாரதியார் பல்கலையின் பதிவாளர் தெரிவித்துள்ளார். கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் பணி நியமனத்திற்கு ₹30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜூம் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 4 மாதங்களாக பல்கலையில் விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் பேராசிரியர் ஞானசேகரன், ஒருவரிடம் பணம் வாங்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பணத்தை பெற்றுக்கொண்ட ஞானசேகரன், துணைவேந்தரிடம் சேர்த்துவிடுவேன் என்று கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சம் பெற பலரை ஏஜென்டாக நியமித்தது தெரியவந்த நிலையில், இந்த வீடியோ வெளியானதால் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார், பேராசிரியர் ஞானசேகரனிடமும் விசாரிக்கின்றனர். இதுகுறித்து ஞானசேகரன் கூறுகையில், `இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள குரல் என்னுடையது அல்ல’’ என்றார். இதுபற்றி பல்கலைக்கழக பதிவாளர் வனிதா (பொறுப்பு) கூறுகையில், `பேராசிரியர் ஞானசேகரன் பணம் வாங்கியது போன்ற வீடியோ வெளியானது குறித்து உயர் கல்வித்துறை செயலருக்கு விரைவில் கடிதம் அனுப்பப்படும். இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பாரதியார் பல்கலையில் தொடரும் சர்ச்சைகளால் மாஜி துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கிய வழக்கு மேலும் சூடு பிடித்துள்ளது.

Related Stories: