மழை வேண்டி ஆடு, கிடாய்க்கு திருமணம் : தர்மபுரி அருகே விநோதம்

தர்மபுரி: தர்மபுரி அருகே மழை வேண்டி ஆட்டுக்கும், கிடாய்க்கும் திருமணம் செய்து வைத்து மலைகிராம மக்கள் விநோத சடங்கு நடத்தினர். தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியம் கொமத்தாம்பட்டி புதூர் கிராமத்தில் குருமன்ஸ் பழங்குடியினத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆடு வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்ட இவர்கள், 10 ஆண்டுக்கு ஒரு முறை, வறட்சியை போக்கவும், மழை வேண்டியும் ஆடுகளுக்கு திருமணம் செய்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, நடப்பாண்டு ஆடுக்கும், கிடாய்க்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, ஊருக்கு மத்தியில் உள்ள வீரபத்திர சுவாமி கோயிலின் முன் பச்சை நிற பந்தல் போட்டு தேர்வு செய்யப்பட்ட ஆட்டுக்கிடா பெட்டை ஆட்டுக்கு மஞ்சள், குங்குமத்தில் நலுங்கு வைக்கப்பட்டது.

தொடர்ந்து புத்தாடை அணிவித்து மேள தாளங்கள் முழங்க சீர் வரிசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விநாயகர் கோயிலில் வழிபட்டு பந்தலில் ஒரு பலகை வைத்து, அதன் மேல் கிடாரி, ஆட்டை நிறுத்தினர். நல்ல நேரம் நெருங்கியதும் கெட்டி மேளம் முழங்க, ஆட்டுக்கிடா சார்பில் பெண் ஆட்டிற்கு கோயில் பூசாரி தாலி கட்டினார். திருமணத்திற்கு வந்த கிராம மக்கள் மொய் வைத்தனர். அவர்களுக்கு அசைவம் கலக்காத அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

இதுகுறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது: குருமன்ஸ் பழங்குடி மக்கள், பெருங்கற்காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திறகு புலம்பெயர்ந்தவர்கள். முன்னோர்களின் கலாச்சாரத்ைதயும், பண்பாட்டையும், பழக்கவழக்கத்தையும் இன்றுவரை அப்படியே பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஆடுகளுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோதம் நடக்கிறது.

இம்மக்களிடையே ஆரியகுலம், செங்கி குலம், யான குலம், நாழிய குலம், பெண்டி குலம், அரச குலம் என 70க்கும் மேற்பட்ட குலப்பிரிவுகள் உள்ளது. இதில் மாமன், மைத்துனர் குலத்திற்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வர். ஆட்டுக்கிடா ஆரிய குலத்திலும், பெண் ஆடு செங்கி குலத்திலும் உறவு முறை அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. பின்பு நல்லநாள், நேரம் பார்த்து ருமணம் நடக்கிறது. மக்கள் வழங்கும் மொய்ப்பணம் கோயிலுக்கு சேரும். திருமணம் முடிந்தவுடன் ஆட்டுக்கிடாய், பெண் ஆட்டின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படும். எக்காரணம் கொண்டும் இந்த ஆடுகள் வெட்டப்படாது.  இறந்த பின்பு மனிதர்களுக்கு செய்வது போல ஈமச்சடங்குகள் செய்யப்பட்டு புதைக்கப்படும். இந்த நூதன திருமணம் 10 முதல் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆடு ேமய்ப்பதை தொழிலாக கொண்ட இவர்கள், அவற்றை கடவுளாக நினைத்துக்கொண்டு, இத்திருமணத்தை நடத்துகின்றனர். வறட்சியை போக்கவும், மழை பெய்யவும், வளம் பெருகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்த திருமணம் வழிவகுக்கும் என்பது பல தலைமுறைகளாக இவர்களிடம் தொடரும் நம்பிக்கை.

இவ்வாறு பேராசிரியர் சந்திரசேகர் கூறினார்.

Related Stories: