ஆப்கனில் தலிபான் தீவிரவாத தாக்குதல் 14 ராணுவ வீரர்கள், 4 போலீசார் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள், 4 போலீசார் உயிரிழந்தனர். ஆப்கன் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் வாக்காளர் பதிவு மையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அப் கமாரி மற்றும் குவாதிஸ் மாவட்டங்களில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முறையே 9 மற்றும் 5 ராணுவ வீரர்கள் என 14 ராணுவத்தினர் உயிரிழந்தனர். அதேபோல், 4 போலீசார் கொல்லப்பட்டனர். 3 போலீசார் காயமடைந்தனர்.

ராணுவத்தினரும் எதிர்தாக்குதல் நடத்தியதில் தலிபான் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் நங்கர்ஹார் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பல்கலை கழக மாணவர்கள் உயிரிழந்ததாக கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் சகோதரர்கள் என்றும், இந்த உயிரிழப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஆயினும் இந்த தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

Related Stories: