நெல்லை பட்டறைகளில் தயாராகும் பொங்கல் சீர் பித்தளை பானைகள்  

நெல்லை: நெல்லை பகுதி பட்டறைகளில், தலைப்பொங்கல்  கொண்டாடும் தம்பதிகளுக்கு சீர் வழங்குவதற்காக பித்தளை பானைகள் தயாராகி  வருகின்றன. இதற்கான தயாரிப்பில் பட்டறை ஊழியர்கள் மும்முரமாக  ஈடுபட்டுள்ளனர். தமிழர் திருநாளாம் ‘‘தைப்  பொங்கல்’’ பண்டிகை, வருகிற ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல்  பண்டிகைக்காக வழங்கப்படும் சீர்வரிசை பொருட்களில் பித்தளை பானைகள், உருளி, போணி சட்டி உள்ளிட்டவை முக்கிய இடம்பெறுகின்றன. பண்டிகைக்கு 27 நாட்களே  உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களாக நெல்லையை அடுத்த பழையபேட்டை, பேட்டை, டவுன், தச்சநல்லூர் பகுதியில்  உள்ள பட்டறைகளில் பொங்கலுக்கான பித்தளை பானைகள் தயாரிக்கும் பணிகள்  தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. பித்தளை  ஷீட்களை வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து துத்தநாகம், செம்பு  சேர்த்து பாத்திரங்களின் தன்மைக்கேற்ப வடிவமைப்பு செய்து வருகின்றனர். பொங்கல்  பண்டிகைக்கு ஓரிரு வாரங்களே உள்ளதால், பாத்திரப் பட்டறைகள் இரவு பகலாக இயங்குகின்றன. ஒரு  நாளைக்கு 40 பித்தளை பானைகள் வீதம் ஒவ்வொரு பட்டறையிலும் பானைகள்  உருவாக்கப்படுகின்றன. தற்போது நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள்  விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. கடந்த  2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்த பொங்கல்  பண்டிகை, இம்முறை வழக்கமான உற்சாக கொண்டாட்டத்துடன் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப கடைசி நேரத்தில் வியாபாரம் களை கட்டும் என்றும்  உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.இதுகுறித்து பழையபேட்டை பித்தளை பாத்திர தயாரிப்பாளர் சரவணன் கூறுகையில், கடந்தாண்டை போல்தான் பித்தளை பானையின் விலை உள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஆண்டும் ஒரு கிலோ எடையிலான பொங்கல் பானை ரூ.750 முதல் 800 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ குத்து சட்டிக்கு ரூ.720 முதல் 760 என விலை உள்ளது. ஆர்டர் குறைவாகவே உள்ளது. முன்பு மார்கழி மாதம் தொடங்கியதும் வியாபாரிகள் அவசரமாக பாத்திரங்களை கேட்பார்கள். இப்போது அந்த பரபரப்பு இல்லை. மேலும் இந்த தொழில் செய்ய வருபவர்களின் ஆர்வமும் குறைந்துவிட்டது. புதிதாக இளைஞர்கள் இத்தொழில் செய்ய வரவில்லை. சீர் கொடுப்பதற்கான கட்டாய கடமைக்காக சிலர் விளக்கு, குடம் உள்ளிட்ட பித்தளை பாத்திரங்களை குறைந்தளவில் வாங்குகின்றனர். தற்போது தண்ணீர் பிடிப்பது உள்ளிட்ட எதற்கும் பிளாஸ்க் பொருட்களைத்தான் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த தொழிலுக்கான எதிர்காலம் குறைந்து வருகிறது. பித்தளை பாத்திரங்களின் பயன்பாடு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்தொழில் சிறக்க உதவ வேண்டும். செம்பு கலந்த பித்தளை பாத்திரப் பொருட்களை பயன்படுத்துவதால் நரம்பு தளர்ச்சி ேபான்ற பிரச்னை வராது. ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும், என்றார்….

The post நெல்லை பட்டறைகளில் தயாராகும் பொங்கல் சீர் பித்தளை பானைகள்   appeared first on Dinakaran.

Related Stories: