சின்னாளபட்டி : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுள்ளியில் கதிர் நரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. கடந்த 2006-07ல் திமுக ஆட்சியில், ஆத்தூர் தொகுதி எம்எல்ஏவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்த ஐ.பெரியசாமி, எம்எல்ஏ மேம்பாட்டு நிதி மூலம் கோயில் அருகே திருமண மண்டபம் கட்டி கொடுத்தார். அதனருகிலேயே உணவு உண்ணும் அறையும் தனது சொந்த செலவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கட்டி கொடுத்தார். அப்போது கொத்தபுள்ளி ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் திருமண மண்டபம் செயல்பட்டது. அதன்பின்னர் அதிமுக ஆட்சியில் இந்து சமயநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த திருமண மண்டபம் வந்தது. ஆனால் கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில், உரிய பராமரிப்பில்லாததால் இந்த திருமண மண்டபம் சேதமடைந்துள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட கழிவறை பயன்பாடின்றி உள்ளது. இதனால் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதியடைகின்றனர். இதுகுறித்து கொத்தபுள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு, துணைத்தலைவர் ரங்கசாமி ஆகியோர் கூறுகையில், ‘இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’ என்றனர். கோயில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள் கூறுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்ட இந்து சமயநிலையத்துறை இணை ஆணையரிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளேன். கழிவறை, திருமண மண்டப பராமரிப்பு குறித்து பொறியாளர் மூலம் ஆய்வு செய்துள்ளோம். விரைவில் பொறியாளரிடமிருந்து பட்டியல் பெற்ற பின் கழிவறை, திருமண மண்டப பராமரிப்பு பணிகள் துவங்கும்’ என்றார்….
The post ரெட்டியார்சத்திரம் கொத்தபுள்ளி பெருமாள் கோயிலில் பராமரிப்பின்றி கிடக்கும் திருமண மண்டபம் appeared first on Dinakaran.
