
ஐதராபாத்: பான் இந்தியா நடிகரான அல்லு அர்ஜுனுக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர் இப்போது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் ‘ராக்கா’ படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்களில் குறிப்பாக குழந்தைகள், அல்லு அர்ஜுனின் படங்களில் வரும் நடனங்கள் மற்றும் அவரது மேனரிசங்களை செய்து பார்க்கும் ரீல்ஸ் வீடியோக்கள் சோஷியல் மீடியா முழுவதும் பரவிக் கிடக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஸ்ரத்தா என்கிற சிறுமிக்கு, அல்லு அர்ஜுனை சந்திக்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக இருந்தது.
இந்த சிறுமிக்கான புற்றுநோய் சிகிச்சை பொறுப்பேற்றுள்ள மேக் எ விஷ் அறக்கட்டளை இந்த தகவலை அல்லு அர்ஜுனிடம் தெரிவிக்க, அவரும் அந்த சிறுமியுடன் வீடியோ கால் மூலமாக உரையாடி அவரை குஷிப்படுத்தினார். அந்த உரையாடலின் போது தான் டாக்டராக விரும்புவதாக அந்த சிறுமி கூற, நீ நல்லபடியாக குணமடைந்து ஐதராபாத்துக்கு வந்து என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று அன்பாக வேண்டுகோள் விடுத்த அல்லு அர்ஜுன், குழந்தையின் விருப்பத்திற்கு செவிசாய்த்து ‘புஷ்பா’ படத்தின் தனது புகழ்பெற்ற தாடியை தடவும் மேனரிசத்தையும் செய்து காட்டினார்.
அதற்கு அந்த சிறுமியும் அதேபோல் செய்து காட்டியதும் அல்லு அர்ஜுன் சிறுமியை பாராட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுனின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

