சென்னை: மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி கூறும்போது, ‘‘இந்தப் படத்திற்குப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை நேர்த்தியாக அமைந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக சித்து சித் நடித்துள்ளார். தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அந்த வகையில் அவருக்கு இது மறுபிரவேசமாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால் எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார்.
அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார். இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .தங்கள் திறமையைக் காட்டி உழைத்துள்ளார்கள்’’ என்றார்.

