ஐதராபாத்: தமிழில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தெலுங்கிலும் நடிக்கிறார். ‘போலீஸ் கம்ப்ளைன்ட்’ என்ற தெலுங்கு படத்தில் அவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்கு வரலட்சுமி வர மறுக்கிறார் என படத்தின் இயக்குனர் சஞ்சீவ் மெகோட்டி குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து இயக்குனர் கூறும்போது, ‘‘வரலட்சுமி சரத்குமார் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார்,
ஆனால் படத்தை விளம்பரப்படுத்த அவர் விரும்பவில்லை. படத்தின் முதல் பாதிக்கு டப்பிங் பேசிய அவர், ‘சரஸ்வதி’ என்ற அவர் இயக்கிய படத்தை முடிப்பதற்காக பாதியிலேயே சென்றுவிட்டார். 2ம் பாதிக்கு டப்பிங் பேசி முடிக்காமல் 3 மாதங்கள் எங்களை அலைக்கழித்தார். எனது படத்தை சிறு படமாக பார்க்கிறார். பட விழாவில் பங்கேற்க கெஞ்சினேன். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
படப்பிடிப்பின்போது வரலட்சுமிக்கு கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரக்கூடாது என்பதற்காக கதையிலும் அவருக்கு விபத்து ஏற்படுவதுபோல் காட்சியமைத்து படப்பிடிப்பு நடத்தினேன். காயத்துடன் அவர் நடித்தபோது, எந்தவித சிரமத்தையும் அவருக்கு நான் கொடுக்கவில்லை. லேசாக வந்து போவது போன்ற காட்சிகளையே அவரை வைத்து எடுத்தேன். அந்த நன்றியும் அவருக்கு இல்லை’’ என்றார்.
