சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்குகிறது. கடந்த 21ம் தேதி மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில் நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர், தேர்தல் பணிகள் குறித்து பேசியதாவது: இந்த தேர்தலில் நான் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், நேரடியாக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்யவில்லை. ஆனால், சோஷியல் மீடியாவில் எனது கருத்துகளை பதிவிட்டு பிரசாரம் செய்து வந்தேன்.
இந்த தேர்தலில் திமுக 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக 7வது முறையாக ஆட்சியும், மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராகவும் ஆவது உறுதி. தேர்தலில் 4 முனை போட்டி என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழகத்தில் தேர்தல் என்றால், எப்போதுமே திமுக, அதிமுகவுக்கு இடையே மட்டும்தான். வரும் மே 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள், தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் என்றால் என்ன என்பதை உணர்த்தும். அதன்மூலம் அவருக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
அதுபோல், விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது வாக்கு வங்கி மற்ற கட்சிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தவெக 1 அல்லது 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஜெயிக்காத ஒருவருக்கு வாக்களிப்பதில் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இருக்காது. பாஜ கூட்டணியில் இருக்கும் நிர்வாகி ஒருவர் சிட்பண்ட்ஸ் நடத்தி, அதன்மூலம் மயிலாப்பூரில் வசிக்கும் பல நடுத்தரவர்க்க குடும்பங்களின் 700 கோடி ரூபாய் பணத்தை மோசம் செய்துவிட்டார்.
அதற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழிசை சவுந்தர்ராஜன், இதுவரை 6 முறை தேர்தலில் தோற்ற பின்பு, தற்போது 7வது முறையாக தோல்வியை சந்திக்க மயிலாப்பூரில் களம் இறங்கியுள்ளார். பாஜ போட்டியிடும் 27 தொகுதிகளில், இம்முறை 2 இடங்களில் வெற்றிபெறுவதே அதிகம்.
மறைந்த ஜெயலலிதாவின் இடத்தை, தான் நிரப்பிவிட்டோம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு அந்த கட்சி சிதறிவிட்டது. இப்போது டிடிவி தினகரனின் அமமுக சந்தர்ப்பத்துக்காக மட்டுமே அதிமுகவுடன் இணைந்துள்ளது. என்னை பொறுத்தவரையில், மு.க.ஸ்டாலின் சாதனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் கிடைக்கும் வெற்றி தேர்தலாகவே இந்த தேர்தலை பார்க்கிறேன்.
* 500ல் 460 வாக்குறுதிகள் நிறைவேற்றம்
மு.க.ஸ்டாலின் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டார் என்று பேசும் விஜய், பிரதமர் மோடி 145 லட்சம் கோடி கடன் வாங்கியதை பற்றி பேச மறுப்பது ஏன்? மாநில அரசின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தராத நிலையில், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 500 வாக்குறுதிகளுக்கு மேல் கொடுத்து, அதில் 460 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி திமுக.
கடந்த அதிமுக அரசு செய்ததை விட, அதிக எண்ணிக்கையில் கோயில் குடமுழுக்குகளை நடத்தியுள்ளது திமுக அரசு. ‘ஸ்டாலின் தொடரட்டும்’ என்ற பாடல் மக்களிடத்தில் வெகுவாக சென்றடைந்துள்ளது. பெண்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் தருவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.
