பரதன் இயக்கத்தில் வெளியான ‘பைரவா’ என்ற படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஹேமா. அதன்பிறகு பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த அவர், தற்போது இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். செல்வராகவனுடன் நடித்த அனுபவம் குறித்து ஹேமா கூறுகையில், ‘‘இப்படத்தில் ஹீரோயின் குஷி ரவியின் அண்ணியாக நடித்துள்ளேன். படத்தில் பல முக்கிய காட்சிகளில் நான் இடம் பெறுகிறேன். குறிப்பாக செல்வராகவன், கவுசல்யா தொடர்புடைய ஒரு பாடலில் நானும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடி இருக்கிறேன். செல்வராகவனுடன் இணைந்து நடித்த முதல் காட்சியில் நான் பயத்தில் நடுங்கிவிட்டேன்.
அதனால் மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனம் அனைத்தும் எனக்கு மறந்துவிட்டது. அந்த காட்சியை இயக்குனர் பல டேக்குகள் எடுத்தார். நான் பயப்படுவதை பார்த்த செல்வராகவன் என்னிடம் ‘நடிக்கும்போது யாரையும் நினைத்து பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எப்படி ஒரு கதாபாத்திரமோ அதேபோல நானும் ஒரு கதாபாத்திரம் தான். அதனால் என்னை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நீங்கள் பார்க்க வேண்டும். பதட்டமடைய வேண்டாம்’ என்று இயல்பாக பேசி எனது பயத்தை போக்கினார். அதன்பிறகு அந்த காட்சியில் நடித்து முடித்தேன். அடுத்ததாக சமுத்திரக்கனி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளேன். ரித்திகா சிங் பாணியில் ஆக்ஷன் கலந்த வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’’ என்றார்.
