தமிழகத்தின் முதல் தவ்வை சிற்பம் கண்டெடுப்பு: 13ம் நூற்றாண்டை சேர்ந்தது

திருவண்ணாமலை: செங்கம் அருகே அரிதாரமங்கலம் கிராமத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழகத்தின் முதல் தவ்வை சிற்பம் கல்வெட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செங்கம் தாலுகா அரிதாரிமங்கலம் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்தவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அந்த கிராமத்தின் ஏரிக்கரை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை சிற்பம் கல்வெட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இது, தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுடன் கூடிய முதல் தவ்வை சிற்பம் என தெரியவந்துள்ளது. அரிதாரிமங்கலம் ஏரிக்கரையின் வடக்கு பகுதியில், சுமார் 3 அடி உயரம், 3 அடி நீளம் உள்ள தவ்வை மூத்த தேவி என்று அழைக்கப்படும் சிற்பம் உள்ளது. இந்த சிற்பத்தின் இடதுபுறத்தில் 8 வரியில் கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டையும், சிற்பத்தையும் ஆய்வு செய்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால் கூறுகையில், முதல் முறையாக, இங்கு தவ்வை சிற்பத்தை செய்து கொடுத்த செய்தி கிடைத்திருப்பது சிறப்பாகும். அதோடு, தவ்வை சிற்பத்தின் தன்மையும் தனித்துவமாக உள்ளது. வழக்கமாக, தவ்வை கால்களை பரப்பி தொங்கவிட்டு பெருத்த வயிறுடன் அமைந்திருக்கும். ஆனால், இங்கு சுகாசனத்தில் அழகிய உருவமாக காட்டப்பட்டுள்ளது. தவ்வையின் மகனாக கருதப்படும் மாந்தன், மாட்டு முகத்துடன் வலதுபுறம் காட்டப்படுவது மரபு. ஆனால், இங்கு இடதுபுறம் காட்டப்பட்டுள்ளது. மகள் மாந்தி வலதுபுறம் காக்கை கொடி ஏந்தியிருப்பது தெளிவாக இடது தோள்புறம் காட்டப்பட்டுள்ளது. மூவரும் அபயவரம் காட்டி அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தூம்பையும், தவ்வையும் ஒன்றாக காணப்படுவதால், ஏரியின் காவல் தெய்வம் என்பது உறுதியாகிறது.  தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கேட்டையார் கல்வெட்டும் சிற்பமும், கலை, சமய, சமூக வரலாற்றிற்கு புதிய செய்தியை அளித்திருக்கிறது. மன்னர் பெயர் இல்லாததால், கல்வெட்டின் காலம் எழுத்தமைதியை அடிப்படையாக கொண்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்தது என உறுதி செய்யலாம் என்றார்….

The post தமிழகத்தின் முதல் தவ்வை சிற்பம் கண்டெடுப்பு: 13ம் நூற்றாண்டை சேர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: